‘கர்நாடகா முஸ்லிம் தலைவர்களைத் தூண்டிவிடுகிறது பாஜக’: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

‘கர்நாடகா முஸ்லிம் தலைவர்களைத் தூண்டிவிடுகிறது பாஜக’: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

டைபெற்று முடிந்திருக்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெற்று இருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் முதல்வர் யார் என்ற போட்டி முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்து வரும் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு, புதிய கோரிக்கை ஒன்றை கர்நாடகா மாநில வக்ஃப் வாரியத் தலைவர் ஷஃபி சதி வைத்து இருக்கிறார். அதாவது, கர்நாடகாவில் முஸ்லிம் ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை ஆகும்.

இது தொடர்பாக பாஜகவின் அமித் மாளவியா, வக்ஃப் வாரியத் தலைவரின் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பின்மை ஒரு விலையுடன் வந்துள்ளது‘ என்று தெரிவித்து இருக்கிறார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் பேசியிருக்கும் வக்ஃப் வாரியத் தலைவர், "தேர்தலுக்கு முன்பே நாங்கள் துணை முதல்வராக ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும், எங்களுக்கு 30 இடங்கள் வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். 15 இடங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் 9 முஸ்லிம் வேட்பாளர்கள் வென்றி பெற்று இருக்கிறார்கள். அதோடு, 67 -72 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முஸ்லிம்களாலேயே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் அதிகமாகவே கொடுத்திருக்கிறோம். நாங்கள் சிலவற்றைப் பெறுவதற்கான நேரம் இது. ஒரு முஸ்லிம் துணை முதல்வராக வேண்டும். அத்துடன் உள்துறை, வருவாய், கல்வி போன்ற நல்ல துறைகளுடன் ஐந்து அமைச்சர் பதவிகள் வேண்டும். கர்நாடகாவில் இதுவரை முஸ்லிம் ஒருவர் முதல்வராக இருந்ததில்லை, ஆனாலும், நாங்கள் அதனைக் கேட்கவில்லை" என்று வக்ஃப் வாரியத் தலைவர் ஷஃபி தெரிவித்து இருக்கிறார்.

அமித் மாளவியாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுத்திருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவன்கெரா, "உங்களுடைய போலி தேவைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என்றாலும், இது கொஞ்சம் அதிகம். ஷஃபி சதி பின்னால் பாஜக உள்ளது" என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கேவிடம் ஒப்படைத்த அடுத்த நாளிலேயே வக்ஃப் வாரியத் தலைவரின் துணை முதல்வர் கோரிக்கை கிளம்பி உள்ளது. ஏற்கெனவே சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையில் முதல்வர் போட்டி நடைபெற்றுவரும் நிலையில், தற்போது வக்ஃப் வாரியத்தின் கோரிக்கை, இந்தப் பிரச்னையை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com