ஒடிஸாவில் பெண் போலீஸ் அதிகாரியை முகத்தில் குத்திய பா.ஜ.க எம்.எல்.ஏ!

ஒடிஸாவில் பெண் போலீஸ் அதிகாரியை முகத்தில் குத்திய பா.ஜ.க எம்.எல்.ஏ!

ஒடிஸா மாநிலத்தில் மாநில அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர், தடுத்து நிறுத்திய பெண் போலீஸ் அதிகாரியை பிடித்துத் தள்ளி, முகத்தில் குத்தியதுடன் அவர் மீது வசைமாரி பொழிந்தார்.

ஒடிசா மாநிலம், சம்பல்பூரைச் சேர்ந்தவர் ஜெய்நாராயண் மிஸ்ரா. பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஜெய்நாராயண் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் மேல செல்லவிடாமல் தடுத்தனர்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜெய்நாராயண் மிஸ்ராவும், போலீஸ் அதிகாரி அனிதா பிரதானும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த்து. அப்போது தம்மை தடுத்து

நிறுத்த முற்பட்ட பெண் போலீஸ் அதிகாரியை கோபத்தில் பிடித்து தள்ளி, முகத்தில் குத்தினார் எம்.எல்.ஏ. ஜெய்நாராயண். மேலும் அந்த அதிகாரியை கண்டபடி திட்டினார்.

இது தொடர்பாக அந்த பெண் போலீஸ் அதிகாரி கூறும்போது, நான் பா.ஜ.க.வினர் உள்ளே நுழைய முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்தினேன். அப்போது எம்.எல்.ஏ. எனக்கு நேராக நின்றிருந்தார். அவரை தடுத்து நிறுத்த முயன்றபோது, என்னை தடுக்க நீயார் எனக் கேட்டார். நான் எனது அடையாள அட்டையை காட்டியதும், உன்னை எனக்குத் தெரியும். நீ ஒரு கொள்ளைக்காரி, லஞ்சம் வாங்குபவள் எனக் கூறிவிட்டு என்னைப் பிடித்து தள்ளினார். முகத்தில் குத்தினார். மேலும் மிரட்டும் தொனியில் பேசினார் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் பரஸ்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. மகளிர் அணியினரை போலீஸார் மிரட்டியதை அடுத்தே நான் முன்னே சென்றேன். நான் அதிகாரியை மிரட்டவும் இல்லை, பிடித்து தள்ளவும் இல்லை. போலீஸார் மீது நாங்கள் புகார் கூறியதால் பதிலுக்கு என் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் என்றார் பா.ஜ.க. எம்.எல்.ஏ.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சம்பல்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இதனிடையே போலீஸ் அதிகாரியை முகத்தில் குத்திய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை கோரி, போலீஸ் சங்கத்தினர் டி.ஐ.ஜி.யிடம் மனு கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் ஜார்சுகுடாவில் அமைச்சர் ஒருவரை போலீஸ்காரரே சுட்டுக் கொன்றுள்ளார். இப்போது பெண் போலீஸ் அதிகாரி எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கே சரியில்லை. அந்த போலீஸ் அதிகாரி மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் லலிதேந்து வித்யாதர் மொஹாபாத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவரான ஜெய்நாராயண் மிஸ்ராவுக்கு அடிதடிகளில் ஈடுபடுவதே வழக்கமாகிவிட்டது. அவர் மீது கொலை வழக்கு உள்பட 14 வழக்குகள் உள்ளன என்று பிஜு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீமாயி மிஸ்ரா பதில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com