2024 தேர்தலில் பா.ஜ.க 50 இடங்களை இழக்கும்: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கணிப்பு!

2024 தேர்தலில் பா.ஜ.க 50 இடங்களை இழக்கும்: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கணிப்பு!

திருவனந்தபுரம் எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர். காங்கிரஸ் கட்சியினரே அவருக்கு எதிராக நின்றதால் அவரால் கட்சித் தலைவர் பதவியை வென்றெடுக்க முடியவில்லை.

ஆனாலும், சசி தரூரை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. ஐ.நா. சபையின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். பலநாடுகளுக்கும் சென்று மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார். 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் களம் இறங்கிய அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.பி.யாக இருக்கிறார்.

வருகிற 2024 ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 2019 ஆம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றி மீண்டும் கிடைக்காது என்று சொல்கிறார். கடந்த தேர்தலைவிட 50 இடங்களுக்கும் குறைவான இடங்களே பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்கிறார்.

திருவனந்தபுரத்தில் கேரள இலக்கிய விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பா.ஜ.க. இனி கோலோச்ச முடியாது. பல மாநிலங்களில் அவர்கள் ஆட்சியை இழந்து வருகின்றனர். எனவே அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று கூறியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஹரியாணா, குஜராத், ராஜஸ்தானில் அனைத்து இடங்களையும் வென்றனர். பிகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரத்தில் ஒரு இடத்தை தவிர மற்ற இடங்களை கைப்பற்றினர். மேற்குவங்கத்தில் 18 இடங்களை வென்றனர்.

ஆனால், வரும் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி தொடராது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட குறைவாகவே அவர்களுக்கு கிடைக்கும்.

புல்வாமா தாக்குதல், பாலகோட்டு தாக்குதல் சம்பவங்கள் அவர்கள் வெற்றிக்கு கைகொடுத்தன. ஆனால், இப்போது அது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. இந்த முறை பா.ஜ.க. 50-க்கும் மேலான இடங்களை இழந்துவிடும். இதனால் எதிர்க்கட்சிகளுக்குத்தான் லாபம் என்று தெரிவித்துள்ளார்.

வரும் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலிலிருந்து வீழ்த்திவிடுமா என்று கேட்டதற்கு, இந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினம் என்று தரூர் தெரிவித்தார்.

ஒருவேளை பா.ஜ.க.வுக்கு 250 இடங்களும், எதிர்கட்சிகளுக்கு கட்சிகளுக்கு 290 இடங்கள் கிடைத்தாலும் இதர கட்சி எம்.பி.க்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கலாம். இருந்தாலும் இப்போது எதுவும் கூறமுடியாது என்றார்.

2019 மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜ.க. 303 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 52 இடங்களே கிடைத்தன.

காங்கிரஸில் கட்சியில் குடும்ப ஆட்சி இருந்து வருகிறதே என்று கேட்டதற்கு. எந்த அரசியல் கட்சியில்தான் குடும்ப அரசியல் இல்லை என்று கேள்வி எழுப்பினார். சமாஜவாதி கட்சியில் முலாயமுக்கு பிறகு அவரது மகன் அகிலேஷ் வாரிசு அரசியல் நடத்தி வருகிறார். இதேபோல லாலுவுக்குப் பிறகு அவரது கட்சியில் மகன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். திமுகவில் கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலினும், சிவசேனையில் பால் தாக்கரேவுக்குப் பிறகு உத்தவர் தாக்கரேயும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அவரது மகளும், மருமகனும் வாரிசு அரசியல் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com