பா.ஜ.க. வென்றால் யார் முதல்வர்? ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை போட்டு உடைக்கிறார் குமாரசாமி!
கர்நாடகத்தில் பா.ஜ.க. தேர்தலில் வெற்றிபெற்றால் யார் முதல்வர் என்னும் ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் மதச்சார்பற்ற கட்சியின் தலைவர் குமாரசாமி.
கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் இப்போதிலிருந்தே தேர்தல் களத்துக்கு தயாராகி வருகின்றன.
கர்நாடகத்தில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என்று கூறியுள்ள அமித்ஷா, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 136 தொகுதிகளை எப்படியாவது வென்றெடுக்க வேண்டும் என்று மாநில பா.ஜ.க.வினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், இந்த முறை காங்கிரஸ் மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில் பா.ஜ.க.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
கர்நாடக பா.ஜ.க.விலிருந்து வயதை காரணம்காட்டி எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டாலும் அவர் கட்சியின் நாடாளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். மேலும் கர்நாடகத்தில் லிங்காயத்து சமூகத்தினருக்கு இடையே அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
மீண்டும் எடியூரப்பாவை மாநில அரசியலில் களம் இறக்கினால் வெற்றிக்கனியை பறிக்கலாம் என பா.ஜ.க. கருதுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே மோடி, அண்மையில் எடியூரப்பாவுடன் ரகசிய பேச்சு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி, திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
தர்சனஹள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராக இருக்கும் பிரகலாத் ஜோஷிதான் முதல்வராக நியமிக்கப்படுவார். இதற்கான வேலைகளை ஆர்.எஸ்.எஸ். ரகசியமாக செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஜோஷி, தட்சிண கர்நாடகத்தைச் சேர்ந்த பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல, சிருங்கேரி மடத்தில் பிளவு ஏற்படுத்திய பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பிரகலாத் ஜோஷியை கர்நாடக முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தவிர துணை முதல்வர் பதவிக்கு 8 பேர் பட்டியலையும் தயாரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் போலியான உறுதிமொழிகளைக் கண்டு வாக்காளர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (இன்று) பெங்களூருவுக்கு வரவிருக்கும் நிலையில் குமாரசாமி இந்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.