தில்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து இந்தியா கேட் வரை பேரணி நடத்தினார்கள்.
வருகிற 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் முன்பு மகா பஞ்சாயத்து நடத்தவும் முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதில் ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மல்யுத்த வீராங்கனைகள் முடிவு செய்ய இருக்கின்றனர்.
இந்திய மல்யுத்த வீர்ர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று கோரியும், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறும் ஆயிரக்கணக்கானோர் மல்யுத்த வீர்ர், வீராங்கனைகளுடன் பேரணி நடத்தினர்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனா, சாக்ஷி மாலிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினீஷ் போகட் உள்ளிட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்த இந்த பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தில்லியை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மூவர்ணக் கொடியுடன் இந்த பேரணியில் பங்கேற்றனர். பிரிஜ் பூஷனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். பேரணி இந்தியா கேட் பகுதியை வந்தடைந்ததும் வினீஷ், பஜ்ரங் மற்றும் சாக்ஷி ஆகியோர் பேரணியினரிடையே உரையாற்றினர்.
பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை கோரி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத்து வெட்க்க்கேடானது. இன்று இந்திய கேட் பகுதியில் மெழுவரத்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதுதவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
இந்த பேரணியில் பங்கேற்கக்கூடாது என்பதற்காக நூற்றுக்கணக்கானவர்களை போலீஸார் தில்லி நுழைவாயிலில் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்ட வினீஷ், விரைவில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்புவதாக தெரிவித்தார்.
வருகிற 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற வாயில் முன்பு பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் மஹா பஞ்சாயத்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று பஜ்ரங் பூனியா தெரிவித்தார்.