2023-24 பட்ஜெட்: பெண்களுக்கு புதிய சிறு சேமிப்புத் திட்டம் - இது நிர்மலாவின் சிக்ஸர்!
2023-24 ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்கள். பா.ஜ.க அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளையெல்லாம் பட்டியலிட்ட பின்னர், நிதி ஒதுக்கீடுகளை அறிவித்தார். அப்போது பெண்களுக்கான சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி 7.5 சதவீத வட்டி தரும் வகையில் பெண்களுக்கென புதிய சிறு சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்தவொரு தபால் அலுவலகத்திலும் பெண்கள் கணக்கு ஆரம்பிக்க முடியும். கூடிய விரையில் அனைத்து வங்கிகளிலும் கணக்கு ஆரம்பிக்கும் வசதியும் வர வாய்ப்புண்டு.
மத்திய, மாநில அரசாங்கங்கள் பெண்களுக்கென்று பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் முறையாக 2015ல் `சுகன்யா சம்ருதி யோஜனா எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இதில் பெண் குழந்தையின் பெயரில் கணக்கு ஆரம்பிக்கமுடியும் பெண் குழந்தைக்கு வயது பதினெட்டு வயது ஆகும் வரை அவரது கணக்கில் சேமிக்க முடியும். அதிலிருந்து கல்விச் செலவுக்காக 50 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.250. ஆரம்பத்தில் இந்தத் தொகை 1,000 ரூபாயாக இருந்தது. திட்டம் ஆரம்பிக்கபட்டபோது ஆண்டுக்கு 9.6% வட்டி வழங்கப்பட்டது. பின்னர் வட்டி விகிதம் படிப்படியாகக் குறைந்து, தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
செல்வ மகள் திட்டத்தில் ஏறக்குறைய 2 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தேசிய அளவில் தமிழகம் இரண்டாமிடத்தைப் பெற்றது. இவ்வாண்டு நிதியமைச்சர் அறிவித்துள்ள புதிய சேமிப்புத் திட்டமும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் போல் பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.