2023-24 பட்ஜெட்: அடையாள அட்டையாகும் பான் கார்டு; ஆதார் குழப்பம் தீருவதற்குள் இன்னொரு குழப்பமா?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னுடைய பட்ஜெட் அறிக்கையில் ஆதார், பான், டிஜிலாக்கர் சேவை பரவலாகப்படும் என்ற அறிவித்திருப்பதோடு, தனி நபர் பயன்பாட்டிற்கு என பான் எண்ணிற்கு முக்கியத்துவம் தரப்படப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இனி ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்று பான் கார்டு அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். அரசுத் துறையின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணோடு, பான் கார்டும் பொது அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படும். நிதி சார்ந்த சேவைகளுக்கான கே.ஒய்.சி. என்ற தனி நபர் விவர நடைமுறை முறை எளிதாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் ஆதார் கார்டுதான் இந்தியர்களின் பிரதான அடையாள ஆவணமாக இருந்து வருகிறது. வங்கிக் கணக்கு முதல் மின் இணைப்பு வரை அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டங்கள் நடந்து வருகின்றன. வாக்காளர் அடையாள அட்டையோடு ஆதார் கார்டை இணைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது.
ஆதார் கார்டு மற்றும் மொபைல் நம்பர் ஓடிபி மூலமாக பல்வேறு பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இவை இரண்டும் இல்லாவிட்டால் டிஜிட்டல் இந்தியா ஸ்தம்பித்துவிடும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் பான் கார்டு பக்கம் அரசு தன்னுடைய கவனத்தை திருப்பியிருக்கிறது.
பான் கார்டு, இதுவரை பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 50 ஆயிரத்திற்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகளில் பான் கார்டு நம்பரை குறிப்பிடவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் கார்டை தவறாக பயன்படுத்துபவர்களும் அதிகமாகிவிட்டார்கள்.
பான் கார்டு எண்ணை வைத்து ஒரு தனிநபரின் வருமானம் பற்றிய தகவல்களை பெற முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. முடிந்த அளவு பான் எண்ணை ரகசியமாக வைத்துக்கொள்ளவே பெரும்பாலான இந்தியர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் பான் கார்டை, அடையாள அட்டையாக்கும் திட்டம் அறிமுகமானாலும் பெரிய அளவில் வரவேற்பு பெறாது என்கிறார்கள்.
பான் கார்டில் தனிநபரின் பெயர், பிறந்ததேதி, பான் நம்பர், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆதார் கார்டில் உள்ளது போன்று முகவரி குறித்த விபரங்கள் இருக்கப்போவதில்லை.
முகவரி இல்லாமல் பான் கார்டை முழுமையான அடையாள அட்டையாக பயன்படுத்த இயலாது. கூடிய விரைவில் பான் கார்டில் முகவரி அச்சிடப்பட்டு, அதன் வடிவம் மாற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.