2023-24 பட்ஜெட்: இளசுகளுக்கு என்ன கிடைத்திருக்கிறது?

2023-24 பட்ஜெட்: இளசுகளுக்கு என்ன கிடைத்திருக்கிறது?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட்டின் விஷன் ஸ்டேட்மெண்ட்டில் இளைய தலைமுறையின் நலத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதாக அழுத்தமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இளைய தலைமுறைக்கு ஏற்றபடி, அவர்கள் விரும்பக்கூடிய எத்தகைய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறது என்பதை பார்ப்போம்.

ஸ்டார்ட் அப் முதல் சுற்றுலாத்துறை வரை இளைய தலைமுறையின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்படியான வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்று பட்ஜெட் உரையில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்க தனியாக அக்ரிகல்ச்சர் ஆக்ஸலேரேட்டர் நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் எந்தவொரு புதிய ஐடியாவையும் வரவேற்பதாகவும், அதற்கான முன்னெடுப்புகளை செய்யும் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கு இது பயன்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து இளைய தலைமுறையின் கனவை நனவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் சில புதிய திட்டங்களையும் அறிவித்திருக்கிறார்கள்.

ஸ்கில் பிளாட்பார்ம் - இந்திய இளைஞர்களுக்கு உலகளாவிய வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் வகையில் அவர்களது திறன் மேம்படுத்தப்படும். திறன் மேம்பாட்டுக்காக சர்வதேச பயிற்சி மையங்கள் அனைத்து மாநிலங்களிலும் திறக்கப்படும். பயிற்சி மையங்களின் மூலம் இளைஞர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சென்று பணியாற்றுவதற்கு தயார் செய்யப்படுவார்கள்.

பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா - பணியில் இருக்கும்போது பயிற்சி அளிக்கும் திட்டம். துறை சார்ந்த நிறுவனங்களின் அப்போதைய தேவையை பூர்த்தி செய்வது சவாலாக மாறிவருகிறது. ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாற விரும்பும் இளைஞர்களை ஊக்கப்படுத்துவது அவசியமாகிவிட்டது.

ஐ.டி துறையில் பணியாற்றாமல் மெக்கானிக்கல் துறையில் பணிபுரியும் இளைஞர்கள், இனி பணியில் இருந்தபடியே கோடிங், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், ஐஓடி, முப்பரிமாண பிரிண்டிங் பற்றியெல்லாம் கற்றுக்கொள்ள முடியும். அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை பெற முடியும்.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்களின் உதவியோடு நாடு முழுவதும் 30 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். நேஷனல் அப்ரண்டிஸ் பிரமோஷன் திட்டத்தின் படி, அடுத்து வரும் 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை தீர்மானிக்கும் சப்த ரிஷிகளில் யூத் பவர் என்பதும் இடம்பெற்றிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com