குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் துவக்கம்!

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்
நாடாளுமன்றக் கூட்டத் தொடர்

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி வருகிறார். இரு அவைகளின் கூட்டு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக, இந்த பட்ஜெட் சாமானியர்களின் கனவுகளை நனவாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி குடியரசு தலைவர் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இந்த அறிக்கை 2022-23 முழு நிதி ஆண்டுக்கான இந்திய பொருளாதாரத்தின் நிலையையும், நிதி வளர்ச்சி, பண மேலாண்மை மற்றும் வெளித்துறைகள் உள்ளிட்ட எதிர்கால கண்ணோட்டத்தையும் மதிப்பாய்வு செய்கிறது. நாளை தனது 5-வது நிதி நிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளனர். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்துள்ளது. முன்னதாக நாடாளுமன்ற அவைக்கு வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் முத்தலாக் தடைச் சட்டம் வரை பல விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்து இருக்கிறது என நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்றி வருகிறார்.

ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகால மத்திய அரசாங்கத்தின் செயல்பாடு காரணமாக இந்திய மக்கள் முதன்முறையாக பல சாதகமான மாற்றங்களைக் கண்டுள்ளனர். இன்றைக்கு ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கையும் உச்சத்தில் இருப்பதும், இந்தியாவைப் பற்றிய உலகின் பார்வை மாறுவதும் என மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றார்.

ஒரு சகாப்தத்தை உருவாக்க நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. வறுமை இல்லாத, வளமான நடுத்தர வர்க்கத்தையும் கொண்ட தன்னிறைவு கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இளைஞர் சக்தியும், பெண் சக்தியும் சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் வழிகாட்டியாக நிற்கிறது என குடியரசு தலைவர் முர்மு உரையாற்றி வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com