எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் திட்டம் இல்லாத பட்ஜெட்: ராகுல் காந்தி காட்டம்!

எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் திட்டம் இல்லாத பட்ஜெட்: ராகுல் காந்தி காட்டம்!

“இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை” என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது, மூலதனச் செலவுகளுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட் விவரங்களை அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில் மோடி அரசின் பட்ஜெட்டில் எதிர்கால இந்தியாவை கட்டமைக்க எந்த திட்டமும் இல்லை என்று ராகுல் விமர்சித்துள்ளார். வேலைவாய்ப்பை உருவாக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் இல்லை.

நாட்டின் 40 சதவீத செல்வம் 1 சதவீத பணக்காரர்களின் கையில் உள்ளது. 50 சதவீத ஏழைகள் ஜி.எஸ்.டி. வரியில் 64 சதவீதத்தை செலுத்துகின்றனர். 42 சதவீத இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். பிரதமருக்கு இவைபற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சி, “பட்ஜெட்டில் அறிவிப்புகள்தான் பலமாக இருக்கிறதே தவிரே உள்ளே ஒன்றும் இல்லை” என்று தெரிவித்துள்ளது. வேலையின்மை பிரச்னைக்குத் தீர்வுகாண பட்ஜெட்டில் எந்த முயற்சியும் எடுக்கப்பட்டவில்லை. விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் மோடி அரசு, மக்களின் சுமையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மையை போக்குவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தனது பேச்சில் இரண்டு முறை ஏழைகள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் உரை என்பது வெறும் அரைமணி நேர வேலை என்பதைத் தவிர இதில் வேறு ஒன்றும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

அரை மணி நேரத்தில் என்னாலும் பட்ஜெட் தயாரிக்க முடியும். ஏழைகளுக்கான பட்ஜெட், சாதாரண மக்களுக்கான பட்ஜெட், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலான பட்ஜெட்டாக இது இல்லை. நான் பல துறைகளில் பணியாற்றி இருக்கிறேன். எங்களாலும் பட்ஜெட் தயாரிக்க முடியும். நாங்கள் வரியை உயர்த்தாமல், மக்களுக்கு சுமை ஏற்படாமல் பட்ஜெட் தயாரிப்போம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட் பற்றி கருத்து கூறுகையில், வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட். ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகளுக்கு பயனளிக்கும் பட்ஜெட். வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ள பட்ஜெட் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com