புதைந்து போன போபர்ஸ் ரகசியம் - இந்துஜா சகோதரர்களில் மூத்தவர் மறைவு!

புதைந்து போன போபர்ஸ் ரகசியம் - இந்துஜா சகோதரர்களில் மூத்தவர் மறைவு!

லண்டனைச் சேர்ந்த ஸ்ரீசந்த் பரமானந்த இந்துஜா தன்னுடைய 87வது வயதில் காலமாகியிருக்கிறார். இந்துஜா சகோதரர்களில் இவரே மூத்தவர். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த எஸ்.பி.இந்துஜா, நேற்று மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துஜா சகோதரர்கள் பற்றி மில்லினியத்தில் பிறந்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 90கள் வரை பத்திரிக்கைகளில் அவ்வப்போது அடிபட்ட பெயர்.எஸ்.பி. இந்துஜாவும் அவரது சகோதரர்கள் கோபிசந்த், பிரகாஷ் உள்ளிட்டவர்கள் போபர்ஸ் ஊழலில் சம்பந்தப்பட்டிருந்ததாக தொடர்ந்து பேசப்பட்டு வந்தது

இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய போபர்ஸ் ஊழலில் ஏபி போபர்ஸ் என்னும் ஆயுத வியாபாரியிடம் இந்திய அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் வாங்கியது தொடர்பாக இந்துஜா சகோதரர்கள் கமிஷன் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.

பரமானந்த தீப் சந்த ஹிந்துஜா என்பவர்தான்இந்துஜா நிறுவனத்தை ஆரம்பித்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் முக்கியமான நிறுவனமாக வளர்ந்தது. பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இருந்து இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வணிகம் செய்து கொண்டிருந்தார்கள். 1919ல் சிந்து மகாணத்தில் இருந்து கிளம்பி ஈரானுக்கு சென்று தன்னுடைய வணிகத்தை விரிவுபடுத்தினார்.

அவரது மகனான எஸ்.பி ஹிந்துஜா, வணிகம் தவிர ஏராளமான தொழில்களை மேற்கொண்டு இந்துஜா நிறுவனத்தை உலகளவில் பிரபலப்படுத்தினார். 1964ல் ராஜ் கபூர் நடித்த சங்கம் படத்தை இந்தியாவுக்கு வெளியே குறிப்பாக வளைகுடா நாடுகளில் வெளியிட்டார். இதன் மூலம் அவருக்கு ஏராளமான பணம் கொட்டியது.

1986ல் இந்திய ராணுவத்துடன் 1437 கோடி ரூபாய்க்கு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் இந்துஜா சகோதரர்களுக்கு பெரிய பங்கு இருந்தது. 155 எம்எம் ரக துப்பாக்கிகளில் 400 துப்பாக்கிகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் அது. ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்காக அந்நாட்டைச் சேர்ந்த போபர்ஸ் நிறுவனம், இந்திய அரசில் பதவி வகித்தவர்கள், ராணுவ அதிகாரிகள் உள்பட் பலருக்கு லஞ்சம் கொடுத்தாக ஸ்விஸ் நாட்டு வானொலி செய்தி வெளியிட்டது.

போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டதாக வந்த ஊழல் புகார், ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கையில் பெரிய சறுக்கலராக இருந்தது. 1989ல் நடைபெற்ற தேர்தலில் அவரால் ஆட்சியமைக்க முடியாத நிலை இருந்தது. அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த வி.பி. சிங்தான் முதல் முதலாக ஊழலை வெளிக்கொண்டு வந்தார்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது போபர்ஸ் ஊழல் குறித்து சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் எந்த முன்னேற்றமுமில்லை. போதுமான ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தால் 2005ல் இந்துஜா சகோதரர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இந்துஜா நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 38 நாடுகளில் கிளைகள் உண்டு. இதில் ஒன்றரை லட்சம் பேர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com