பங்கு விற்பனை ரத்து! முதலீட்டாளர்களை காப்போம் அதானி குழுமம் அறிவிப்பு!

பங்கு விற்பனை ரத்து!  முதலீட்டாளர்களை காப்போம் அதானி  குழுமம் அறிவிப்பு!

அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டின் மத்தியில், அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. அதனை தொடர்ந்து இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அதானி குழுமம், நாளுக்கு நாள் எங்களது பங்குகளில் ஏற்ற இறக்கம் என்பது அதிகமாக உள்ளது. இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, நாங்கள் முதலீட்டாளர்களின் நலனை கருதி இப்படி முடிவினை எடுத்துள்ளோம் என்கிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் அதானி குழுமத்தைச் சார்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. அதிகபட்சமாக 20 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. அதுமட்டுமல்லாமல் அதானியின் சொத்து மதிப்பும் மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் 20,000 கோடி மதிப்புடைய பங்கு விற்பனை ரத்து (FPO) செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் பணம் திரும்ப அளிக்கப்படும் என்று அதானி குழும தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வீடியோ வழியாக கெளதம் அதானி பேசியுள்ளார். அந்த வீடியோவில் அதானி கூறியிருப்பதாவது: இப்போது பங்கு விற்பனையை தொடர்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. என்னை பொறுத்தவரை முதலில் முதலீட்டளர்கள் நலனுக்குக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே இந்த பங்கு விற்பனை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு நிறுவனத்தின் செயல்பாடுகளிலோ எதிர்கால திட்டங்களிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எங்களின் வரிக்கு பிந்தைய வருமானம், நிறுவனங்களில் பண சுழற்சி ஆகியவை மிகவும் வலுவாக இருக்கின்றன. கடந்த காலங்களில் கடனை சரியாக கையாண்டுள்ளோம். நீண்ட கால நோக்கில் சந்தை மதிப்பையும் வளர்ச்சியையும் அதிகப்படுத்தும் செயல்பாடுகளை தொடரவுள்ளோம். இவ்வாறு தனது வீடியோவில் கெளதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com