புவி சுற்றுவட்டாரத்தில் நிலைநிறுத்தப்பட்டது சந்திராயன் 3! அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

இஸ்ரோ வெளியிட்ட படம்
இஸ்ரோ வெளியிட்ட படம்

நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

நிலவிற்கு செல்லும் இந்தியாவின் 3வது விண்கலமான சந்திரயான் மூன்றின்  இருபத்துஐந்தரை  மணி நேர கவுன்ட்டவுன் வியாழக்கிழமை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டங்கள்  நடைபெற்றன. அதன் பின்னர்,   எரிபொருள் நிரப்பும் பணிகளும் முழுமையாக நிறைவடைந்தன. அதன் தொடர்ச்சியாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திட்டமிட்டபடி சந்திரயான் - 3 விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

அப்போது, அங்கிருந்த விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர். பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோமீட்டர் உயரத்தில், புவிவட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சந்திரயான் 3 விண்கலம் அதன் முதற்கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட் சுமந்து சென்ற விக்ரம் லேண்டர், இதுவரை எந்த நாடும்  செல்லாத, தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இப்பகுதியில் இந்தியா 2008- ஆம் ஆண்டு அனுப்பிய சந்திரயான் 1, நிலவில்  தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது.  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்,  பிரக்யான் ரோவரை விடுவிக்கும், ரோவர்,   நிலவின் மேற்பரப்பில், ஒரு நிலா நாள் சுற்றிவந்து ஆய்வை மேற்கொள்ளும். ஒரு நிலா நாள் என்பது பூமியில் 14 நாள்களுக்கு இணையானது.      

விக்ரம் லேண்டர் சக்கரம்:

நிலவின் தரையில் இந்தியாவின் சின்னம் பதியும் வகையில், விக்ரம் லேண்டரின் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு சக்கரத்தில் அசோக சின்னமும், மற்றொரு சக்கரத்தில் இஸ்ரோவின் சின்னமும் இடம்பெற்றுள்ளன. நிலவில் விக்ரம் லேண்டர் நகரும் போது, அதன் தடத்தில் இந்த இரண்டு சின்னங்களும் நிலவின் தரையில் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com