சட்டீஸ்கர் பெண்களின் ஆர்கானிக் ஹோலி முயற்சி!

சட்டீஸ்கர் பெண்களின் ஆர்கானிக் ஹோலி முயற்சி!

இன்று ஹோலி பண்டிகை. இதை இப்போதெல்லாம் வட இந்தியர்களின் பண்டிகை என்று தனியாகக் கருத இடமில்லை. இங்கு தமிழகத்திலும் பெரும்பாலான இடங்களில் ஹோலி கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி என்றாலே வண்ணங்களின் சங்கமம் தான் நினைவுக்கு வரும். ஹோலி கொண்டாடுபவர்கள் வண்ணப் பொடிகளை ஓடி ஓடி பொடிகளை விசிறித் தூவி ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசியும், தேய்த்தும் காற்றில் பறக்க விட்டும் மெய் மறந்து அந்த நொடியின் சந்தோசத்தில் லயித்துப் போகிறார்கள். ஆனால், வண்ணங்கள் முகத்தில் அறைபடும் வேகத்தைப் பார்த்தால் மூச்சுத் திணறல் வந்து விடாதா?! என்றொரு பயமும் இல்லாமலில்லை. பிறகு இன்னொரு பயமும் கூட.. இந்தப் பொடிகள் எல்லாம் எப்படித் தயாராகின்றன? இவற்றால் சருமத்துக்கோ அல்லது சுவாச உறுப்புகளுக்கோ ஏதேனும் தீங்கு நேர்ந்து விடக்கூடாதே! என்றெல்லாம் கூட யோசனைகள் ஓடும்.

அந்த பயத்தைப் போக்குவதே போல இந்தத் தகவல் இன்று கண்ணில் பட்டது.

சட்டீஸ்கரைச் சேர்ந்த இந்தப் பெண்கள் இயற்கையான முறையில் வண்ணப் பொடிகள் தயாரிக்கிறார்கள் என்பது தான் அந்தத் தகவல். அவர்கள் அதை குலால் என்கிறார்கள். அதாவது காற்றில் வீசித் தூவத் தகுந்த வண்ணப் பொடிகள். இவற்றை இந்தப் பெண்கள் பூக்கள், மஞ்சள் மற்றும் கீரையில் இருந்து தயாரிக்கிறார்களாம். இந்த தயாரிப்புப் பணிக்கு இவர்கள் பசுமடங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வண்ணச் சேர்க்கைக்கு மலர்களைத் தவிர பீட்ரூட், மாதுளை, உள்ளிட்ட காய்கறி, பழங்களையும் கூட இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.இதன் மூலம் தயாரிக்கப்படும் வண்ணப் பொடிகளை இவர்கள் ஹெர்பல் குலால் என்கிறார்கள். இதற்கான தயாரிப்புக்கு கோமடங்கள் பயன்படுத்தப் படுவதோடு தயாரிக்கப்படும் பொருளுக்கான பேக்கேஜிங் மற்றும் விற்பனைக்கும் கூட இவர்களுக்கு அங்குள்ள மகளிர் குழுக்கள் உதவுகின்றன என்று மஹாசமுண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பிகா சாஹு கூறினார்.

இம்முறை இந்தக் குழுவானது 100 கிலோவுக்கு மேல் மூலிகை குலாலை தயாரித்திருந்தது. அவை அத்தனையும் விற்பனை ஆகி விட்டன. ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம் தவிர, சட்டீஸ்கர் மாநிலம் முழுவதும் மூலிகை குலாலுக்கு அதிக தேவை இருப்பதால், ராய்ப்பூர் மாநகராட்சி எல்லையில் உள்ள ஜார்வோய் கவுதன் என்ற இடத்தில் உள்ள பெண்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத விதத்தில் இரசாயனங்கள் இல்லாத வண்ணமயமான பொருட்களை தயாரிக்க கைகோர்த்துள்ளனர்.

ஜார்வோய் கவுதனின் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட 300 கிலோவுக்கும் அதிகமான மூலிகை குலால் கடந்த வாரம் ஒடிசாவில் உள்ள சம்பல்பூருக்கு அனுப்பப்பட்டது. கௌதனின் சுகாதாரத் தரத்தை பராமரிக்கும் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் மூலிகை குலாலுக்கு அதிக தேவை உள்ளது” என்று கவுதனின் அதிகாரி சஞ்சய் சர்மா கூறினார்.

மாநிலத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களை (SHGs) மேம்படுத்தும் சாதனையின் மற்றொரு முயற்சியாக, கடந்த ஆண்டு குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களால்  தயாரிக்கப்பட்ட ரூ.48 லட்சம் மதிப்புள்ள 25,000 கிலோ மூலிகை குலால் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஆக, இந்த ஆண்டுக்கான ஹோலியை ஆர்கானிக் ஹோலி என்று கொண்டாடி மகிழலாம் தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com