குழந்தை அம்மாவின் கஸ்டடியில் இருப்பதே உகந்தது: நீதிமன்றம் உத்தரவு!

குழந்தை அம்மாவின் கஸ்டடியில் இருப்பதே உகந்தது: நீதிமன்றம் உத்தரவு!

கருத்து வேறுபாடு காரணமாகவோ அல்லது குடும்ப வன்முறை காரணமாகவோ பிரிந்த தம்பதிகளிடையே குழந்தையை யார் பொறுப்பில் வைத்துக் கொள்வது என்பது குறித்து இதுவரை பல்வேறு வழக்குகள் நமது நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் யாருக்கு குழந்தையை வளர்க்கும் தகுதியும், உண்மையான அக்கறையும் இருக்கிறதோ அவர்களிடமே குழந்தை வளர வேண்டும் என்பது தான் பெரும்பாலான நீதிபதிகளின் தீர்ப்பாக இருந்திருக்கிறது. இதோ சமீபத்தில் நீதிமன்றத்திற்கு வந்த அத்தகைய வழக்குகளில் ஒன்றை மும்பை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, ஸ்ரீகாந்த் ஒய் போசலே எப்படித் தீர்த்து வைத்திருக்கிறார் என்று பார்ப்போம்.

18 மாதச் சிறுவனின் கஸ்டடிக்கு குழந்தையின் பிரிந்து வாழ்ந்து வரும் தாய், தந்தை இருவருமே முயன்றனர். இருவருக்குமே சம வயது. 2020 ல் பெற்றோர்கள் பார்த்து அவர்களது சம்மதத்தில் பேரில் நடந்த திருமணம் அது. 2021 நவம்பர் மாதம் அந்த்ப் பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது . ஆனால், 2022 ல் அந்தப்பெண் தன் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் புகார் ஒன்றைச் சமர்பிக்கிறார். இதன் காரணமாக கணவரது வீட்டில் இருந்து மார்ச் 8, 2022 அன்று அந்தப் பெண்மணி வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து மீண்டும் அந்தப் பெண் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் கணவரது வீட்டில் தனக்கு நேர்ந்த விஷயங்கள் அனைத்தையும் புகாராக்கி மீண்டுமொரு வழக்காகப் பதிவு செய்கிறார்.

இந்நிலையில் கணவரது வீட்டினருக்கும், பெண் வீட்டினருக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு அந்தப்பெண் மீண்டும் கணவருடன் சென்று வாழ்வதாகவும் ஒரு கட்டத்தில் முடிவானது. அதன்படி கணவரது வீட்டில் சென்று வாழ முயன்ற பெண்ணுக்கு அங்கு அதற்கான சூழல்கள் நிலவாத நிலையில் மீண்டும் அந்தப் பெண் கணவர் வீட்டிலிருந்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மூலமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார். குழந்தையை கணவர், மனைவியிடம் ஒப்படைக்கவில்லை. 8 மாதங்களே ஆன பால்குடி மறக்காத சிசுவை கணவரிடம் விட்டுச் செல்ல மனமில்லாத நிலையில் அப்பெண், குழந்தையின் கஸ்டடி கேட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தை நாடினார். அப்போது அப்பெண்ணின் கணவரது வழக்கறிஞர், தன் கட்சிக்காரரின் மனைவிக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில் குழந்தையை அவரால் சரியான முறையில் வளர்த்தெடுக்க முடியாது எனக் காரணம் காட்டி குழந்தையை தந்தையின் கஸ்டடியிலேயே வளர்க்க உத்தரவிடுமாறு நீதிபதியைக் கேட்டுக் கொண்டார்.

ஆனால் குழந்தையின் தாய், தனது கணவர் வீட்டில் ஐந்து நாய்கள் இருப்பதாகவும், குழந்தைக்கு சுகாதாரமற்ற சூழ்நிலை இருப்பதாகவும் தனது தரப்பு வாதத்தை சமர்ப்பித்தார். அத்துடன் தான் துன்புறுத்தப்பட்டதாகவும், குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், வீட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறினார்.

வழக்கை தீர விசாரித்த நீதிபதி செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஸ்ரீகாந்த் ஒய் போசலே, குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது என்பதைக் காரணம் காட்டி 18 மாத சிறுவனை அவனது தாயாரிடமே தற்காலிக கஸ்டடியில் ஒப்படைக்கும் வண்ணம் உத்தரவிட்டார்.

முதல்முறை குடும்ப வன்முறை காரணமாக அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் போது கடந்த ஒரு வருடமாக குழந்தையை அவரிடம் ஒப்படைக்காமல் தந்தையும், அவரது பெற்றோரும் தங்களிடமே வைத்துக்கொண்ட முடிவு குழந்தைக்குப் பாதகமானதாகத்தான் இருந்திருக்கிறது. குழந்தை தான் தாயின் அரவணைப்பும் தாய்ப்பாலும் இன்றி மெலிந்து, மனச்சோர்வுடன் காணப்படுகிறான். எனவே குழந்தையின் நலன் அவன் தாயுடன் வசிப்பதில் இருக்கிறது எனக்கருதி தற்காலிகமாக குழந்தையை அவன் தாயினது கஸ்டடியில் வளர்க்க கோர்ட் உத்தரவிடுகிறது எனத் தீர்ப்பு வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com