புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் சோழர் கால மாதிரி செங்கோல்!
புதிய நாடாளுமன்றத்தில் சோழர் காலத்து தங்கச் செங்கோல் இடம்பெறவிருப்பதாக நேற்று முதலே செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தங்கச் செங்கோல் வழங்கப்படும் நிகழ்வு புதிதன்று. இது இந்தியா சுதந்திரம் பெற்ற காலம் முதலே கொண்டு வரப்பட்ட வழக்கம். முதன்முதலில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கரங்களால் அன்றைய வைஸ்ராய் லார்ட் மெளண்ட் பேட்டன் கரங்களில் கொடுத்து வாங்கப்பட்டு பிறகு சுதந்திர இந்தியாவுக்கான முதல் பிரதமர் நேருவின் கரங்களில் பெருமையுடன் அளிக்கப்பட்டது. பண்டித நேருவுக்கு செங்கோல் வழங்கும் சடங்கின் போது செங்கோலின் மீது கங்கை நீர் தெளிக்கப்பட்டு அதைப் புனித நீராட்டி தேவாரத் திருப்பதிகங்கள் எல்லாம் பாடப்பட்டு நிகழ்வு மிக விமரிசையாக நடத்தப்பட்டதாக பழைய பத்திரிகைச் சான்றுகள் கூறுகின்றன.
செங்கோலுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?!
உலகம் முழுவதுமே பண்டைய மன்னர் ஆட்சி மரபில் செங்கோல் என்பது அரசுச் சின்னங்களுள் ஒன்று. மன்னனுக்கு மகுடமும், அரியணையும் போன்றே செங்கோலும் இன்றியமையாததாகும். அரியணை ஏறும் மன்னனின் ஆட்சி நேர்மையானதாகவும், நெறி வழுவாததாகவும் அமைய வேண்டும் என்பதன் பொருட்டே செங்கோல் எனும் உலோக அமைப்பு அரசன் வீற்றிருக்கும் போதெல்லாம் கையில் காணப்படும்.செம்மை+கோல் என்பதுவே செங்கோல் என்றாகும் (செம்மை = நேர்மை). மாறாக, கொடுமையானதும், அட்டூழியம் நிறைந்ததுவுமான ஆட்சி கொடுங்கோல் ஆட்சி எனப்படும்.
தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரத்தில், செய்யாத தவறுக்காக கோவலனைத் தண்டித்தமையால் பாண்டியன் அறம் வழுவினான். இதனால் அவன் செங்கோல் வளைந்தது என்றும், பின்னர் தன் உயிரைக் கொடுத்து வழுவிய செங்கோலைப் பாண்டிய மன்னன் நிமிர்த்தினான் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, அதே பாரம்பரியத்தைப் பின்பற்றும் எண்ணத்துடனே இந்த வழக்கம் மக்களாட்சி முறையிலும் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.
சரி இந்தச் செங்கோல் சோழர் காலச் செங்கோல் என்று குறிப்பிடப்பட்டாலும், இது அதே போன்ற மாதிரி செங்கோல் தானே அன்றி அதுவே அல்ல!
பழைய பத்திரிகைப் புகைப்படங்களில் காணும் போது உச்சியில் ரிஷபம் அமர்ந்திருக்க வேலைப்பாடமைந்த கைப்பிடி போன்ற அமைப்புடன் செங்கோல் காட்சியளிக்கிறது
இந்த மாதிரி செங்கோலை, மே 28 ஆம் தேதி திறக்கப்படவிருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே நிறுவ உத்தரவிட்டுள்ளாராம் மோடி.
ஆள்பவர்கள் கையில் செங்கோல் ஒப்படைக்கும் நிகழ்வை அன்று முன் நின்று நடத்தியவர் மூதறிஞர் ராஜாஜி. அப்போது அவர் கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
இந்த விழாவில் யாருடைய கையால் மோடி செங்கோல் பெற்றுக் கொள்ளப்போகிறாரோ தெரியவில்லை!