ராகுல் காந்தியின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!
ராகுல் காந்தி வெளிநாடு பயணம் மேற்கொண்டால் காங்கிரஸ் மேலிடத்திற்கே அது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை ராகுல் காந்தி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று வருவார். தனிப்பட்ட பயணம் என்று அவரது தரப்பிலிருந்து விளக்கம் தரப்படும்.
எந்த நாடுகளுக்கு சுற்றுப் பயணம் போயிருக்கிறார், எதற்காக பயணம், யாரை சந்திக்க இருக்கிறார் என்றெல்லாம் கேள்விகளை வழக்கமாக பா.ஜ.கவினர் எழுப்புவார்கள். எந்தக்கேள்விக்கும் பதில் இருக்காது. சென்றமுறை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட ராகுல் காந்தியின் ரகசிய பயணங்களை விமர்சித்திருக்கிறார்.
இம்முறை ராகுல் காந்தியின் பயணத்தை காங்கிரஸ் கட்சி, முக்கிய செய்தியாக ஊடகங்களில் கசிய விட்டது. கொரோனா காலத்து மோடியைப் போல் நீண்ட தாடி வைத்திருந்த ராகுல்காந்தி, தாடியை ட்ரிம் செய்துவிட்டு லண்டனுக்கு கிளம்பினார். இந்தியாவிலிருந்து கிளம்பியதில் இருந்து, லண்டனில் அவர் பங்கேற்ற சந்திப்புகள் வரை அத்தனையும் ஊடகங்களில் அடிபட்டது.
லண்டனுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசிய விஷயம்தான் இரண்டு நாட்களாக டெல்லி அரசியலை உலுக்கி வருகிறது. இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருவதாக அவர் பேசியதை பா.ஜ.க மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கூட ரசிக்கவில்லை. இதுவரை எந்தவொரு தேசியக்கட்சி தலைவரும் வெளிநாடுகளில் பேசும்போது அவநம்பிக்கையுடன் பேசியதில்லை.
ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, பா.ஜ.கவினரை கோபப்படுத்தியிருக்கிறது. ஜி20 விஷயத்தில் உலகத்திற்கே முன்னாடியாக இந்தியா இருந்து வருகிறது. உலக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக வல்லரசு நாடுகள் கூட இந்தியாவை வியந்து பார்க்கும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களைப் பற்றி தேவையில்லாமல் வெளிநாடுகளில் பேசி, இந்தியர்களை அவமானப்படுத்திவிட்டார் என்று பா.ஜ.க கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.
பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான ரவி சங்கர் பிரசாத், இந்தியாவின் ஜனநாயகம், நாடாளுமன்றம், அரசியல் நடைமுறை மற்றும் நீதிமன்ற நடைமுறைகளை ராகுல் காந்தி அவமானப்படுத்தியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான மல்லிகார்ஜூன கார்கே என்ன செய்யப் போகிறார்? கார்கே மட்டுமல்ல சோனியா காந்தியும் தன்னுடைய மகனின் பொறுப்பற்ற பேச்சுகளை பொறுத்துக்கொண்டு இருக்கிறார் என்று தெவித்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் பாதயாத்திரை சென்று, இப்போதுதான் அரசியலில் ராகுல் காந்திக்கு ஒரு திருப்பு முனை கிடைத்திருக்கிறது. அதற்குள் அடுத்த சறுக்கல் ஆரம்பித்துவிட்டதா என்று அங்கலாய்க்கிறது காங்கிரஸ் வட்டாரம்.