செங்கோலை இருட்டடிப்பு செய்த காங்கிரஸ்: ஸ்மிருதி கண்டனம்
ஆட்சி மாற்றத்துக்காக வழங்கப்பட்ட செங்கோலை, காங்கிரஸ் கட்சியினர் ஏதோ நேருவுக்கு வழங்கப்பட்ட கைத்தடி போல அதை அருங்காட்சியத்தில் வைத்து இருட்டடிப்பு செய்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டினார்.
புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவை காங்கிரஸ் புறக்கணித்துள்ளதை அடுத்து அக்கட்சிக்கு கடும் கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “செங்கோல் என்பது பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து இந்தியா விடுதலைபெற்றதை குறிக்கும் வகையில் நேருவிடம் வழங்கப்பட்டது. ஆனால், காந்தி குடும்பத்தினர், அதை ஏதோ நேருவுக்கு வழங்கப்பட்ட கைத்தடியாக நினைத்து அருங்காட்சியகத்தில் வைத்து இருட்டடிப்பு செய்துவிட்டனர்.
நாட்டின் வரலாறு மற்றும் ஜனநாயகம் பற்றி காந்தி குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள். செங்கோலை மறைத்து வைத்துவிட்டு அதன் வரலாறு மக்களுக்கு தெரியக்கூடாது என்று
நினைக்கிறார்களா? இப்போது புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் தங்களைப் போன்றவர்களை தூண்டிவிடுகிறார்களா என்றும் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார். அவர்களது முடிவு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்றும் அமைச்சர் இரானி குறிப்பிட்டார்.
முன்னதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, எதிர்க்கட்சிகளை சாடினார். நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவையும் அவர்கள் அவமதிக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
புதிய நாடாளுமன்ற வளாக திறப்புவிழாவை புறக்கணிக்கும் நண்பர்கள் அனைவரும் 1947 ஆம் ஆண்டு டைம்ஸ் இதழில் வெளிவந்த கட்டுரையை படிக்க வேண்டும். 1947 இல் என்ன நடந்தது என்பதையும் செங்கோலின் முக்கியத்துவத்தையும் அவர்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடாகம் ஆடுவதன் மூலம் அவர்கள் தங்கள் தலைவர் ஜவாஹர்லால் நேருவையே அவமதிக்கிறார்களா? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவிடம் அதிகாரத்தை ஒப்படைத்ததை குறிக்கும் வகையில் வழங்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் மோடி 28 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது அதில் வைக்கப்பட உள்ளது. இந்த செங்கோலை
அன்றைய தினம் ஆதீனம், பிரதமரிடம் வழங்க உள்ளார். புதிய நாடாமன்ற வளாகத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திறக்காமல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.