காங்கிரஸ் விடும் அழைப்பு!

காங்கிரஸ் விடும் அழைப்பு!

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை வரும் ஜனவரி 3 ஆம் தேதி காஸியாபாதில் உள்ள லோனி வழியாக உத்தரப் பிரதேசத்திற்குள் நுழைகிறது. பின்னர் பாக்பட் மற்றும் ஷாம்லி வழியாகச் சென்று ஹரியானாவை அடைகிறது.

ராகுல் காந்தி எம்.பி. தலைமையில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் ராஷ்ட்ரீய லோகதளம் கட்சித் தலைவர் ஜெயந்த செளதுரி ஆகியோருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

"தற்போது நாட்டில் மக்கள் குரலெழுப்ப முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, மக்கள் மனதை புரிந்துகொள்ள ஒரே வழி யாத்திரைதான். உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் யாத்திரையில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமாஜவாதி எம்.எல்.ஏ. சிவபால் சிங் யாதவ், மாயவதி கட்சி பொதுச் செயலர் சதீஷ் மிஸ்ரா, சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் அதுல் அஞ்சன் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர்" என்றார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசோக் சிங்.

இந்த யாத்திரையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், 'இது ஒரு கட்சி சார்புடைய யாத்திரை அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்குமான யாத்திரை. பல்வேறு கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவும் இதில் பங்கேற்கிறார்' என்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை, மொத்தம் 3,750 கி.மீ. பயணத்துடன் யாத்திரை காஷ்மீரில் பிப்ரவரியில் முடிவடைகிறது. இதுவரை கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களைக் கடந்து 2,800 கி.மீ. பயணம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 9 நாள் இடைவெளிக்குப்பின் யாத்திரை ஜனவரி 3 இல் மீண்டும் தொடங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com