ஆளுங்கட்சியாக ஒரு நிலை; எதிர்க்கட்சியாக ஒரு நிலை!

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டாம். உணர்வுபூர்வமான விஷயம் குறித்து அவையில் விவாதிப்பது சரியல்ல என்றார் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையை அவையில் விவாதிக்க மறுத்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு மறுத்து வருவதாக புகார் கூறப்படுகிறது. அரசியல்ரீதியில் பார்க்கும் போது, இப்பிரச்சனை உணர்வுப் பூர்வமானதாக அமைகிறது. எனவே, இதை அவையில் விவாதிப்பது சரியாக இருக்காது.

2005 ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையை நாடளுமன்றத்தில் நான் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது எழுப்பினேன். ஆனால், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்,  இந்தப் பிரச்னை உணர்வுப்பூர்வமானது; எனவே இதுபற்றி அவையில் விவாதிக்கப்படுவதில்லை என்று என்னிடம் கூறினார்.

இதேபோல கடந்த 2008 ஆம் ஆண்டில், சீனப் பிரதமர் இந்தியா வந்திருந்தபோது, எல்லைப் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை வைத்தது. ஆனால், அப்போது அவைத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, இந்த விவகாரத்தை அவையில் எழுப்ப வேண்டாம் என மீண்டும் கூறினார். தனிப்பட்ட முறையில் மத்திய அரசு இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கும் என்றார்.

அப்போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எல்.கே.அத்வானி, இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை உணர்வுபூர்வமான பிரச்னை என்பதை ஒப்புக்கொண்டு பா.ஜ.க.வின் கோரிக்கையை கைவிட்டார்.

ஆனால், இப்போது காங்கிரஸ் அந்த பிரச்னையை கையிலெடுத்துள்ளது. இப்பிரச்னையை அவையில் எழுப்புவது தேச நலனுக்கு உகந்ததா என்பதை அக்கட்சி இப்போது சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார் கிரண் ரிஜிஜு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com