
பிகார் முதல்வரும் எனது அரசியல் ஆசானுமாகிய நிதிஷ்குமாரை சிலர் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த சதி செய்து வருவதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் உபேந்திர குஷ்வாஹா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரரான உபேந்திர குஷ்வாஹா செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் சமீபத்தில் தில்லியில் பா.ஜ.க. தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு வந்தது பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் உண்மை என்ன என்பதை கூறத் தயாராக இருக்கிறேன்.
இது தொடர்பாக நிதிஷ்குமார் என்னை அழைத்து விளக்கம் கேட்டால் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். இதற்காக கட்சிக்கூட்டத்தை அவர் கூட்டினாலும் தவறில்லை. முதல்வரை பலவீனப்படுத்தும் முயற்சிக்கு எதிராக குரல் கொடுக்க நான் தயங்க மாட்டேன் என்றார் அவர்.
முன்னாள் முதல்வரும் சோஷலிஸ்ட் தலைவருமான கர்பூரி தாகூர் பிறந்தாள் நிகழ்ச்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்காதது குறித்து தமது கோபத்தையும் குஷ்வாஹா வெளியிட்டார்.
நிதிஷ்குமார் எதிர்ப்பாளர்களை தம்மைப் போல் வேறு எவரும் சரியாக எதிர்கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட குஷ்வாஹா, நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்காவிட்டால், முதல்வருக்கு எதிராக கடுமையாகப் பேசிய லாலு கட்சி எம்.எல்.ஏ. சுதாகர் சிங்குக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்போது பேரம் நடத்தப்பட்டதாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி வெளிப்படையாகக் கூறிவருகிறது. அப்படியானால் அது என்ன என்பதை தெரிந்துகொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நான் சிறிது காலம் நிதிஷ்குமாரை பிரிந்து இருந்தேன். ஆனால், அவர், அரசியலில் பலவீனமாக இருந்த நிலையில் நான் எனது கட்சியை (ஆர்.எல்.எஸ்.பி.) கலைத்துவிட்டு மீண்டும் அவருடன் இணைந்தேன் என்றார் குஷ்வாஹா.
நிதிஷ்குமாரை பலவீனப்படுத்தும் முயற்சி தொடர்கிறது. நிதிஷ்குமார்தான் கூட்டணித் தலைவர் என்பதை ராஷ்ட்ரீய ஜனதாதளத்தினர் ஏற்க மறுத்து வருகின்றனர். இதுபற்றி நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன் என்றார்.
சமீபகலாமாக மாநிலத்தில் நடக்கும் செய்திகள் பற்றி பத்திரிகையாளர்கள் ஏதாவது கேட்டால் எனக்குத் தெரியாது என்பதுபோல் நிதிஷ்குமார் கூறிவருகிறார். முதல்வரை சுற்றியிருப்பவர்கள் மாநிலத்தில் நடப்பவைகள் குறித்து அவருக்கு விரிவாக எடுத்துச் சொல்வதில்லை போல் தெரிகிறது என்றார் குஷ்வாஹா.
இதனிடையே பிகாருக்கு இரண்டு துணை முதல்வர்கள் தேவையில்லை. லாலு கட்சியின் தேஜஸ்வி யாதவ் ஒருவர்தான் துணை முதல்வர். குஷ்வாஹாவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது என்று நிதிஷ்குமார் கூறியதிலிருந்து இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நீடித்து வருகின்றன.
இது குறித்து நிதிஷ்குமாரிடம் கேட்டபோது, குஷ்வாஹா ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிவிட்டு மீண்டும் இங்கேயே வந்துவிட்டார். அவர் பேசிவருவதற்கு எல்லாம் பதில் கூறமுடியாது என்றார்.