சர்ச்சையான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடையில்லை - உச்சநீதிமன்றம்!

THE KERALA STORY
THE KERALA STORY

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வரும் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

32 ஆயிரம் கேரள பெண்கள், லவ் ஜிகாத்தின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாதத்தில் சேர்க்கப்பட்டதாக "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தின் ட்ரைலர் கூறுகிறது.

இந்த படம் ஒரு மதத்தினர் மீது வெறுப்புணர்வை தூண்டுவது போல் இருக்கிறது என்றும் பிரச்சாரத்திற்காக இப்படி ஒரு படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறிய மனுதாரர்கள், இந்த படத்தை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த திரைப்படம் குறித்து வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் நிஜாம் பாஷா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

THE KERALA STORY
THE KERALA STORY

அதில், ‘தி கேரளா ஸ்டோரி திரைப்பட டிரெயிலர் காட்சிகளில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடைபெற்ற விசாரணையில் வழக்கறிஞர் நிஜாம் பாஷா வாதிடுகையில், “கேரளா ஸ்டோரி படத்தில் மதத்துக்கு எதிரான வகையில் மோசமான வெறுப்பு பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. இது, முற்றிலும் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான ஆடியோ-வீடியோ பிரச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

அந்தப் படத்தின் டிரெயிலர் காட்சிகளை 1.6 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள நிலையில், மத துவேஷத்தை தூண்டும் வகையில் தி கேரளா ஸ்டோரி படம் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவிருப்பதால் அதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும்’’ என்றார்.

இது குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு பின்வருமாறு பதில் கூறியுள்ளது, வெறுக்கத்தக்க பேச்சுகளில் பலவகைகள் உள்ளன. இந்தப் படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் உரிய அனுமதியையும், சான்றிதழையும் வழங்கியுள்ளது. படத்தை வெளியிட தடை கோர விரும்பினால் அதற்கு வழங்கப்பட்ட சான்றிதழை எதிர்த்து உரிய அமைப்பில் முறையீடு செய்யவேண்டும். இந்த மனுவை தற்போது விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அனைவரும் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடத் தொடங்கி விடுவார்கள். எனவே படத்துக்கு தடை கோரும் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com