தந்தையைக் கட்டையால் தாக்கியதை வீடியோ கால் செய்து துணைக்கு காட்டிய கொடுமை!
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் பரத். இவருக்கு வயது 21. இவர் சமீபத்தில் தன் தந்தை டில்லி பாபுவைத் தாக்கி வீடியோ கால் மூலம் அதைத் தன் காதலிக்கு காட்டி மகிழ்ந்ததாக அவர் மீது ஆந்திர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
21 வயது பரத்துக்கு 39 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்திருக்கிறது. இதை பரத்தின் தந்தை டில்லி பாபு கண்டித்திருக்கிறார். இது தொடர்பாக மகனுக்கும், தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்திருக்கிறது. அதன் உச்சகட்டமாக ஒரு சமயத்தில் தன் தந்தை டில்லி பாபுவை, பரத் கட்டையால் சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். இச்சம்பவம் கடந்த ஞாயிறு இரவு நடந்திருக்கிறது. சித்தூர் இரண்டாம் சரக எல்லைக்குட்பட்ட இந்த வழக்கு மறுநாள் வெளிச்சத்துக்கு வந்தது. டில்லி பாபு அளித்த புகாரின் பேரில் பரத்தை அழைத்துக் கண்டித்த சித்தூர் போலீஸார் அவரது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுமாறு அவரை எச்சரித்து அனுப்பி இருந்தனர்.
தந்தை தனக்கு எதிராகப் புகார் அளித்தது பரத்தின் கோபத்தை தூண்டி தந்தை டில்லி பாபு மீது மேலும் வெறுப்பை வளர வைத்திருக்கிறது. சமயம் பார்த்துக் காத்திருந்த பரத், தந்தையை மீண்டும் கட்டையால் தாக்கி இருக்கிறான். தாக்கியதோடு நில்லாமல் தன் தந்தையைத் தான் தாக்கும் போது வீடியோ கால் மூலமாகக் காதலியான அந்த 39 வயதுப் பெண்ணை அழைத்து குரூரமாக அதைக் காட்ட வேறு செய்திருக்கிறான்.
பரத்திடம் இருந்து டில்லி பாபுவை மீட்டு அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சித்தூர் இரண்டாம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.