கர்நாடகாவில் பெண்களின் லேட் நைட் பார்ட்டியை தடுத்தி நிறுத்திய கலாச்சார காவலர்கள்!
கர்நாடக மாநிலம், சிவமொக்காவில் வெள்ளிக்கிழமை மாலை, குவெம்பு சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களின் லேட் நைட் பார்ட்டியை பஜ்ரங் தள் அமைப்பு தடுத்து நிறுத்தியது.
தார்மீக காவல்துறையின் அங்கத்தினர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் இவர்கள், மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் கலாச்சாரத்துக்கு இழுக்கு என்று தாங்கள் எண்ணும் நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்தும் அதிகாரம் பெற்றவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்கிறார்கள். இதற்கு அம்மாநில பாஜக தலைமையின் முழு ஆதரவு உண்டு என்று அவர்கள் நம்புகிறார்கள். இவர்களது இந்த கலாச்சாரக் காவலர்கள் தனமான நடவடிக்கையை பொதுமக்களில் பெரும்பாலானோர் அச்சம் அல்லது ஆதரவான மனப்பான்மை காரணமாகப் பொறுத்துக் கொண்டு செல்வதால் இது போன்ற தடுத்து நிறுத்தல்களை மேலும் ஆர்வமாக இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மேற்கூறிய சம்பவ இடத்தில் இந்தக் கலாச்சார காவலர்கள் பெண்கள் பார்ட்டியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்கிருப்பவர்கள் அதற்கு எதிர்வினையாற்றி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தனர். ஆனால், பார்ட்டி நடத்த எதிர்ப்பு வந்ததை அடுத்து அந்த விடுதிக்குள் இருந்த பெண்கள், ஆண்கள், சில குழந்தைகள் உள்ளிட்டோர் அங்கிருந்து உடனடியாக வெளியே வந்தனர். இதன் காரணமாக அங்கு அசம்பாவிதம் ஏதும் நேரவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து பஜ்ரங் தள் தலைவர் ராஜேஷ் கவுடா கூறுகையில், “பெண்களுக்கான இரவு விருந்து நடைபெறும் என ஒரு வாரத்திற்கு முன்பே போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். இதுபோன்ற கட்சிகளை மலநாடு பகுதியில் நடத்தக் கூடாது. எனவே தான் நாங்கள் போலீசாருடன் சென்று அந்த பார்ட்டியை தடுத்து நிறுத்தினோம். என்று கூறினார்.