
நூறு வயதான பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், அண்மையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி விடுத்த இரங்கல் செய்தியில், “நூறாண்டு காலம் வாழ்ந்தவர் இறைவடி சேர்ந்துவிட்டார். அவரது இறப்பை ஒரு துறவியின் பயணமாகவே நான் கருதுகிறேன். ஒரு சிறந்த கர்ம யோகி” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நூறாவது பிறந்தநாளில் அவர் எனக்கு ஒரு விஷயத்தைச் சொன்னார். “புத்திசாலித்தனமாக வேலை செய்ய வேண்டும், புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும்” என்றார். அவரது திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்றும் கூறியிருந்தார்.
தாயாரின் இறுதிச்சடங்குகள் முடிந்த உடன், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஹெளரா- ஜல்பைகுரி வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேற்குவங்கம் தொடர்பான ரயில்வே திட்டப்பணிகளையும், கங்கையை தூய்மைப்படுத்தும் கூட்டத்திலும் விடியோகான்பிரன்சிங் மூலம் பங்கேற்றார்.
இந்த நிலையில் குஜராத் மாநிலம், ராஜ்கோட் புறநகர் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு பிரதமரின் தாயார் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிர் கங்கா பரிவார் அறக்கட்டளை ரூ.15 லட்சம் செலவில் இந்த தடுப்பணையை கட்டி வருகிறது.
ராஜ்கோட்-கலாவாட் சாலையில் வாகுதாத் கிராமத்தில் நையாரி நதியில் இந்த தடுப்பணை கட்டப்பட்டு வருவதாக அறக்கட்டளையின் தலைவர் திலிப் சாகியா தெரிவித்துள்ளார்.
இதற்கான பூமி பூஜையில் உள்ளூர் எம்.எல்.ஏ. தர்ஷிதா ஷா, ராஜ்கோட் மேயர் பிரதீப் தாவ் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தடுப்பணைக்கு அவருடைய பெயரை வைக்க முடிவு செய்தோம். இந்த தடுப்பணை ஹீராபென் ஸ்மிருதி சரோவர் என்று அழைக்கப்படும். தங்களது தாய், தந்தை அல்லது உறவினர்கள் மறைவுக்குப் பின் நன்கொடை அளித்து இதுபோன்ற பணிகளில் மற்றவர்களும் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
கடந்த நான்கு மாதங்களில் வெளியிலிருந்து கிடைத்த நன்கொடைகள் மூலம் 75 தடுப்பணைகள் அறக்கட்டளை மூலம் கட்டப்பட்டுள்ளன. தற்போது கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகள் இரண்டு வாரங்களில் முடிந்துவிடும். இந்த தடுப்பணையில் 2.5 கோடி லிட்டர் தண்ணீரை தேக்கிவைக்க முடியும். தடுப்பணை 400 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்டது. ஒரு முறை தண்ணீர் நிரம்பினால் 9 மாதங்கள் வரை தண்ணீர் வற்றாமல் இருக்கும். நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார் திலிப் சகியா.