மம்தாவுக்கு எதிரான அவதூறு கார்ட்டூன்: 11 ஆண்டுகளுக்கு பிறகு பேராசிரியர் விடுவிப்பு!

மம்தாவுக்கு எதிரான அவதூறு கார்ட்டூன்: 11 ஆண்டுகளுக்கு பிறகு பேராசிரியர் விடுவிப்பு!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகுல்ராய் ஆகியோருக்கு அவதூறான கார்ட்டூன் அனுப்பிய ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மஹாபாத்ரா 11 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதிக்கு பதிலாக முகுல்ராய் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதை கிண்டல் செய்யும் வகையில் மஹாபாத்ரா, சத்யஜித்ரேயின் “சோனார் கெல்லா” திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு மம்தாவை விமர்சிக்கும் வகையில் ஒரு கார்ட்டூன் அனுப்பினார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி கிழக்கு ஜாதவ்பூர் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மஹாபாத்ரா கைது செய்யப்பட்டார். பின்னர் அலிபூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.

மஹாபாத்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 66 ஏ மற்றும் பி, சி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் இது செல்லாது என உச்சநீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு தெரிவித்தது. ஆனாலும் மஹாபாத்ரா மீதான வழக்கு 2021 வரை நீடித்தது.

இதையடுத்து மஹாபாத்ரா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தம்மை வழக்கிலிருந்து விரைவில் விடுவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த புதன்கிழமை (ஜன. 18) விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி, கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலிபூர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்துச் செய்து, மஹாபாத்ராவை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

“மாநில போலீஸார், பொது நிர்வாகம், ஆளுங்கட்சியினர், விஷமிகள் என பலரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்திய போதிலும் ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப்பின் இந்த வழக்கிலிருந்து நான் விடுவிக்கப்பட்டுள்ளேன்” என்று ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் மஹாபாத்ரா தெரிவித்துள்ளார்.

11 ஆண்டுகளாக போலீசாரும், நிர்வாகமும் இந்த வழக்கை இழுத்தடித்தது. நாங்கள் நீதி கேட்டு ஒவ்வொரு நீதிமன்றமாக அலைந்தோம். இறுதியில் நீதிமன்றம் என்னை வழக்கிலிருந்து விடுவித்ததுடன், ஜாமீன் தொகையையும் திருப்பித்தந்துள்ளது என்றார் மஹாபாத்ரா.

இந்த வழக்குக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பில்லை. நீதிமன்றம்தான் வழக்கை இழுத்தடித்தது. இப்போது மஹாபாத்ரா பேச்சு சுதந்திரத்தை அனுபவிக்கட்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செளகத் ராய் தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கையில்லை. ஆனால், ஜனநாயகத்துக்காக போராடி வருவதாக அக்கட்சி கூறிவருவது கேலிக்கூத்தானது. கார்ட்டூன் அனுப்பியதற்காக பேராசிரியர் கைது செய்யப்பட்டதே இதற்கு சான்று என்று பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர்களில் ஒருவரான திலீப் கோஷ் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com