பெண்களை புறக்கணித்த பேருந்து ஓட்டுநர் அதிரடி நடவடிக்கை எடுத்த தில்லி முதல்வர்!
தில்லியில் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் செல்ல அரசு அனுமதித்துள்ளது. பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்பதால் ஒரு பேருந்து ஓட்டுநர் பஸ்நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்களை ஏற்றிச் செல்லாமல் நிற்பதுபோல் நின்று பறந்து சென்றார்.
இது தொடர்பான விடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளிவந்து அது வேகமாக மக்களிடம் பரவியது. இந்த நிலையில் இந்த விடியோவை பார்த்த தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த பேருந்து ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் விதிமுறைகளின்படி அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று மக்களை ஏற்றிச் செல்லவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபோன்ற சம்பவம் மேலும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலவச பயணம் என்பதால் பெண்களை ஏற்றிச் செல்ல பேருந்து ஓட்டுநர் மறுத்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடனேயே முதல்வர் கெஜ்ரிவால் அவரை பணியிலிருந்து விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
தில்லி மாநகர பேருந்து ஓட்டுநர்கள் அரசுடன் ஒத்துழைக்கும் வகையில் செயல்பட வேண்டும். அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதுடன் பயணிகள் அனைவரையும் ஏற்றிச் செல்ல வேண்டும். சில பேருந்து ஓட்டுநர்கள் பெண்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தால் அவர்களை ஏற்றிச்செல்வதில்லை என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. இது சரியானது அல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பேருந்து ஓட்டுநர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே போக்குவரத்துத்துறை அமைச்சர் கெலோட், துறைசார் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி பேசினார். அப்போது இதற்கு முன்னரும் சில சமயங்களில் பெண்களை ஏற்றிச்செல்லாமல் பேருந்துகள் சென்றதாக புகார்கள் வந்தன. ஆனாலும், அப்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு தில்லி அரசுக்கு இல்லாமல் இருந்தது.
இப்போது சேவைத்துறைகள் தில்லி அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளன. எனவே போக்குவரத்து ஊழியர்கள் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தினமும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து எந்த புகாரும் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெண்களை ஏற்றிச்செல்லாமல் சென்ற பேருந்து ஓட்டுநர் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அதே பேருந்துக்கு வேறு ஒருவர் ஓட்டுநராக நியமிக்கப்பட்டார். தவறு செய்த ஓட்டுநர் மீது மேல்விசாரணை நடத்தப்படும். ஓட்டுநர்களின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்பாடுகளை ஒருபோதும் அரசு அனுமதிக்காது. மேலும் இதுபோன்ற முறைகேடுகள் தெரியவந்தால் அதுபற்றி பயணிகள் விடியோ எடுத்து அனுப்பினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கெலோட் குறிப்பிட்டார்.