அதிமுக குடுமி டெல்லி கையில்

அதிமுக குடுமி டெல்லி கையில்

அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க நினைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஸ்-ஓபிஎஸ். அனல் பறக்கும் கோஷ்டி மோதல் விரைவில் முடிவை எட்ட உள்ளது. அதன் பிறகு அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும், போன்ற முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 கட்சிகள் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவை நீதிமன்றம் கேட்கும், அவ்வாறு இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை கேட்டால் என்ன மாதிரியான பதில் வரும் என்பது தான் அதிமுகவுக்குள் இப்போது சுற்றி வரும் கேள்வி. 

எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைத்த வரவு செலவு கணக்கை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றி இடைக்கால பொதுச்செயலாளர் என அவரது பெயரை பதிவிடுவதும், ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதும் ஒரு பக்கம் நடந்தது வந்தது.

 மற்றொருபுறம் தேர்தல் ஆணையம், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பவும் செய்கிறது. எனவே தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

 கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போதே ஒருங்கிணைந்த அதிமுகவை விரும்புவதாக பாஜக டெல்லி மேலிடம் விரும்பிய போதும், எடப்பாடி பழனிசாமி அதை விரும்பவில்லையாம். விடாப்பிடியாக பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்ஸையும் கட்சியை விட்டு நீக்கிவிட்டு இடைக்கால பொதுச்செயலாளார் பதவியில் அமர்ந்துகொண்டார் பழனிசாமி.

“ஓபிஎஸ் ஒருபக்கம், சசிகலா ஒரு பக்கம், தினகரன் ஒரு பக்கம் என பிரிந்து கட்சியை நடத்திக் கொண்டு அதிமுகவின் வாக்குகளை பிரித்தால், அதிமுக பலவீனமாகிவிடும். அத்தகைய சூழலில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் நமக்கும் பலன் இருக்காது என்பதே பாஜக மேலிடத்தின் எண்ணமாக இருக்கிறது.

 எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக பலவித அழுத்தங்கள் கொடுத்து இணைப்பை சாத்தியப்படுத்த டெல்லி முயற்சிக்கும். தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு யூகிக்கமுடியாதபடி இருப்பதற்கு காரணம் டெல்லி மேலிடத்தின் உத்தரவுதான்.

இந்த சூழலில். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. நேற்று மரணமடைந்தார். அதனால் அங்கு நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திக்க முட்டிக்கொள்வார்கள். அதன் பொருட்டு சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்து இணைப்புக்கு சம்மதிப்பதை தவிர அவருக்கு வேறு வழி இருக்காது. ஏனெனில் இரட்டை இலை சின்னத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்” என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

ஈபிஎஸ். இறங்கி வந்து இணைப்புக்கு சம்மதித்தால் மட்டுமே இரட்டை இலை சின்னமும், கட்சியும் காப்பாற்றப்படும். இதை அதிமுக மூத்த தலைவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com