இந்த மாத இறுதிக்குள் தில்லி - ஜெய்ப்பூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்!
தில்லி-ஜெய்ப்பூர் இடையே 11-வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் இந்த ரயில் இயக்கிவைக்கப்படும் என்று வடமேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதாவது வருகிற 20 ஆம் தேதியிலிருந்து தில்லி-ஜெய்ப்பூர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த ரயில் செயல்பாட்டுக்கு வந்தால் தில்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு 1 மணி 45 நிமிடங்களுக்குள் சென்றுவிட முடியும்.
தற்போது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 10 ரயில் வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. புதுதில்லி - வாராணசி, புதுதில்லி - ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி கட்ரா (ஜம்மு-காஷ்மீர்), மும்பை - காந்திநகர், புதுதில்லி - அம்ப் அந்தெளரா (ஹிமாச்சல் பிரதேசம்), சென்னை - மைசூரு, நாகபுரி - விலாஸ்பூர், ஹெளரா - நியூ ஜல்பைகுரி, செகந்திராபாத் - விசாகப்பட்டினம், மும்பை - சாய்நகர் ஷிர்டி, மும்பை-சோலாப்பூர் ஆகிய 10 வழித்தடங்களில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வைஃபை வசதி, அகலமான இருக்கை, பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் அகலத்திரை வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இவை அதிகபட்சமாக 220 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.
இந்திய ரயில்வேத்துறை 102 வந்தேபாரத் ரயில்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ரயில்கள் இந்தியாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. 2022-2023 ஆம் ஆண்டில் 35 ரயில்களும், 2023-2024 ஆம் ஆண்டில் 67 ரயில்களும் தயாரிக்கப்பட உள்ளன. 2022-2023 ஆம் நிதியாண்டில் ரயில்பெட்டிகள் தயாரிக்க ரூ.19,479 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.