டெல்லி to சண்டிகர் : நள்ளிரவில் லாரியில் பயணித்த ராகுல்காந்தி!
நேற்று இரவு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி லாரியில் டெல்லியிலிருந்து சண்டிகர் வரை பயணம் செய்துள்ளார்.
கடந்தாண்டு செப்டெம்பர் மாதம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட நிலையில், அது கடந்த ஜனவரி மாதம் நிறைவுற்றது.
அதைத்தொடர்ந்து பைக்கில் சென்று டெலிவரி பாய்களுடன் உரையாடுவது, பஸ்ஸில் பயணம் செய்து பயணிகளுடன் உரையாடுவது என மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராகுல்காந்தி டெல்லி சண்டிகர் நெடுஞ்சாலையில் லாரியில் பயணம் செய்ததோடு, லாரி நிறுத்துமிடம் மற்றும் சாலையோர உணவங்களுக்கு சென்று உரையாடியுள்ளார்.
ராகுல்காந்தி டெல்லியில் இருந்து சண்டிகர் வரை லாரியில் பயணித்த வீடியோ ஒன்றை, காங்கிரஸ் வெளியிட்டு அந்த பதிவில், 'ராகுல்காந்தி அந்த பயணத்தின் போது, லாரி டிரைவர்களிடம் உரையாடியபடி, அவர்களின் பிரச்னைகளையும் கேட்டறிந்தார். இந்திய சாலைகளில் சுமார் 9 மில்லியன் லாரி டிரைவர்கள் உள்ளனர். அவர்களுக்கென்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் மனதின் குரலை ராகுல் ஜி கேட்டறிந்தார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வீடியோவும், புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.