சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சுவாமியே.. சரணம் ஐயப்பா; கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில், கார்த்திகை முதல் நாளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கொட்டும் மழையில் வரிசயில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 சபரிமலை ஶ்ரீஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை 41 நாட்கள் கடைப்பிடிக்கப் படுகிறது. இதற்காக கோயில் நடை திறக்கப்பட்டு, நேற்றுமுதல் இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் நேற்று கார்த்திகை முதல் நாளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கொட்டும் மழையில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர். தமிழகம் , கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்தனர்.

 இந்நிலையில் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதித்தனர். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது.

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி சரண கோஷங்கள் எழுப்பி காத்திருந்து தரிசனம் செய்தனர். தீபாராதனையை தொடர்ந்து 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் அதனை தொடர்ந்து இரவு 10.50 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

 இந்நிலையில் டிசம்பர் 27-ம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறும் என்று கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி தினசரி அதிகாலை 4 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஶ்ரீஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com