வெளிநாடு வாழ் இந்தியர்கள் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தலாம் தெரியுமா?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தலாம் தெரியுமா?

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அறிமுகமான பிறகு அதை அதிகரிக்க பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் யு.பி.ஐ. மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் தொகை அதிகரித்து வருகிறது.

டிஜிட்டல் இந்தியாவாக மாறிவரும் சூழலில் தற்போது பண பரிவர்த்தனை என்பது ஆன்லைனில் எளிதாக உள்ளது. குறிப்பாக யு.பி.ஐ. பண பரிவர்த்தனை எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதால் ஏராளமான மக்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனிடையே வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சர்வதேச மொபைல் எண்கள் மூலம் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இனி சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய மொபைல் எண்களை நம்பியிருக்காமல் சர்வதேச மொபைல் எண்கள் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.

நான் ரெசிடெண்ட் எக்ஸ்டர்னல் மற்றும் நான் ரெசிடென்ட் ஆர்டினரி கணக்கு வைத்துள்ளவர்கள் சர்வதேச மொபைல் எண்கள் மூலம் யு.பி.ஐ. பணபரிவர்த்தனை செய்ய முடியும் என்று இந்தியாவில் உள்ள நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பொரேஷன் கூறியுள்ளது. இதற்காக அந்த நிறுவனம் மேற்குறிப்பிட்ட 10 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நாட்டு வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவின் வழிகாட்டுதல்களை ஏற்று பின்பற்ற அந்த நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு வருகிற ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

என்.ஆர்.இ. கணக்குகள் வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாங்கள் வெளிநாட்டில் சம்பாதிக்கும் வருமானத்தை இந்தியாவுக்கு மாற்ற உதவுகிறது. என்.ஆர்.ஓ. கணக்கு இந்தியாவில் அவர்களின் வருமானத்தை நிர்வகிக்க உதவுகிறது.

பண மோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதை தடுக்க அன்னியச் செலாவணி மேலாண்மை சட்ட விதிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என்பது மட்டுமே இதற்கான நிபந்தனைகள்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு ரூபே, டெபிட் கார்டு மற்றும் குறைந்த மதிப்பிலான பீம் மற்றும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளை மேம்படுத்த ரூ.2600 கோடிக்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யு.பி.ஐ. பணபரிவர்த்தனை நடவடிக்கை மூலம் வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் பயன்பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் ரூபே மற்றும் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதிச்சலுகைகளும் வழங்கப்படும்.

கடந்த 6 ஆண்டுகளில் யு.பி.ஐ. பணபரிவர்த்தனைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டும் 12 லட்சம் கோடி மதிப்புக்கு யு.பி.ஐ. மூலம் பண பரிவர்த்தனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com