ரயில்களின் கடைசி பெட்டியில் X குறியீடு இருப்பது ஏன் தெரியுமா?
நம்மில் பலரும் ஏதாவது ஒரு சமயத்தில் ரயில்களில் பயணம் செய்திருப்போம். ரயில்களில் பயணம் செய்யும்போது பயணிகள் பலவிஷயங்களை உற்றுநோக்குவார்கள். நாம் செல்லும் ரயில் எப்படியிருக்கிறது என்று ஒருவர் பார்ப்பார். என்னென்ன வசதிகள் உள்ளன என்று மற்றொருவர் கவனிப்பார். இப்படி பலவிஷயங்களையும் பயணிகள் கவனிப்பார்கள். பெரும்பாலான பயணிகள் பயணம் செய்யும் ரயிலின் கடைசி பெட்டியில் X என்ற குறியீட்டை பார்த்திருப்பார்கள். இது பலருக்கும் ஆச்சரியம் அளித்திருந்தாலும் எதற்காக அப்படி ஒரு குறியீடு போடப்பட்டுள்ளது என்பது தெரியாது.
ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் இதற்கான விளக்கத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. ரயில் பயணிகள் பலருக்கும் இதற்கான விடை கிடைத்ததில் அல்லது இதற்கான விடையை தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சிதான்.
எந்த பெட்டியும் விடுபட்டு விடாமல் ரயில் ஒரு இடத்தை கடந்துவிட்டது என்பதை குறிப்பதற்காகத்தான் ரயிலின் கடைசி பெட்டியில் X குறியீடு போடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். அதாவது எந்த பிரச்னையும் இல்லாமல் ஒரு ரயிலின் அனைத்து பெட்டிகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தை கடந்துவிட்டது என்பதை X குறியீடு உறுதிசெய்கிறது.
இது தொடர்பான விடியோவின் கீழே, “ரயிலின் கடைசி பெட்டியில் X குறியீடு இருப்பது ஏன் தெரியுமா? என்று கேட்டு அதற்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது.
இந்த விடியோவை சுமார் 2 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் பேர் லைக்ஸ் போட்டுள்ளனர்.
சும்மா ஒரு விளம்பரத்துக்காக X குறியீடு போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். ரயிலின் கடைசி பெட்டியில் X அல்லது LV என்று எழுதப்பட்டிருக்கும். சிறுவயதிலிருந்தே இதை நான் பார்த்து வருகிறேன். ஆனால், எதற்கா அப்படி போட்டுள்ளனர் என்பது தெரியாமலேயே இருந்தது. இப்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது, “நன்றி” என்று மற்றொருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
பகலில் LV என்று எழுதப்பட்ட சின்னம் இருக்கும். இரவில் அது விளக்குகளால் ஒளிரும். பயணிகள் ரயில் ஆனாலும் சரி, சரக்கு ரயில்கள் ஆனாலும் சரி இது முறைப்படி இருக்கிறதா என்று கண்காணிப்பது ஓடும் ரயிலில் செல்லும் கார்டின் கடமை என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இந்த X குறியீட்டை நான் சாதாரண பாசஞ்சர் ரயில்களின் கடைசி பெட்டியில் பார்த்ததில்லை. ஒரு வேளை எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டுமே இது குறிப்பிடப்பட்டிருக்குமோ என்று நானாகவே நினைத்துக் கொண்டிருந்தேன் என்று வேறு ஒருநபர் பதிவிட்டுள்ளார்.