வகுப்புவாத விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் - சமாஜவாதி கட்சியினருக்கு அகிலேஷ் யாதவ் கட்டளை!

வகுப்புவாத விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் - சமாஜவாதி கட்சியினருக்கு அகிலேஷ் யாதவ் கட்டளை!

தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்புவாதம் குறித்த விவாதங்களில் கலந்துகொண்டு பேசுவதை தவிர்க்குமாறு சமாஜவாதி கட்சி, தலைவர்களையும் தொண்டர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபகாலமாக பா.ஜ.க. அடிப்படை பிரச்னைகளிலிருந்து மக்களை திசைத்திருப்ப வகுப்புவாத விவகாரங்களைத் தூண்டி வருகிறது. பா.ஜ.க.வின் இந்த திசைத்திருப்பும் முயற்சியில் கட்சியினர் சிக்கி கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தியுள்ளார் என்று கட்சியின் தேசிய செயலாளர் ராஜேந்திர செளதுரி கூறியுள்ளார்.

மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. தொடர்ந்து மக்களை திசைத்திருப்பும் வகையில், அடிப்படை விஷயங்களை பற்றி பேசாமல் மத விவகாரங்களையே எழுப்பி வருகிறது. நாட்டில் பண வீக்கம் அதிகரித்து வருகிறது. வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. ஊழல் மலிந்துவிட்டது. விலைவாசி உயர்வால்

விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களும் சிறுமிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். ஏறக்குறைய மாநிலத்தில் ஏதேச்சாதிகார ஆட்சி நடக்கிறது.

இந்த நிலையில் பா.ஜ.க.வினர் அடிப்படை பிரச்னைகளை கையில் எடுக்காமல், மதவிஷயங்களை கையிலெடுத்து மக்களை திசைத் திருப்ப முயல்கிறார்கள்.

எனவே சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் டி.வி. விவாதத்தில் பேசுபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக டி.வி. விவாதத்தில் பங்கேற்பவர்கள் வகுப்புவாதத்தைத் தூண்டும் விவாதங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வகுப்புவாதம் என்பது மிகவும் உணர்வுகளை தூண்டக்கூடிய விஷயமாகும். எனவே இது விஷயத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அநாவசியமாக கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று செளதுரி ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

சமாஜவாதி கட்சி ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சோஷலிஸத்தில் நம்பிக்கை வைத்துள்ளது. ராம் மனோகர் லோகியா வழியில் நாம் செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ராம்சரிதமனஸ் பற்றி சமாஜவாதி கட்சி எம்.எல்.சி. சுவாமி பிரசாத் மெளரியா கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்தே பா.ஜ.க.வும் ஹிந்து அமைப்புகளும் சமாஜவாதி கட்சியை தாக்கிப் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com