E20 பெட்ரோல் இந்தியாவில் அறிமுகம். பெட்ரோல் விலை குறையுமா?

E20 பெட்ரோல் இந்தியாவில் அறிமுகம். பெட்ரோல் விலை குறையுமா?

ந்தியா தன்னுடைய எரிபொருள் தேவைக்கு வெளிநாட்டையே சார்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, அதிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை பிரித்தெடுத்து இந்தியாவில் விற்பனை செய்கிறது. மேலும் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. 

பெட்ரோலுக்காக அதிகமாக வெளிநாட்டைச் சாராமல் இருக்கவும், இந்தியாவில் பெட்ரோல் தேவையை வெகுவாகக் குறைக்கவும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட திட்டங்களை செயல் படுத்துவதாகும். 

அடுத்த கட்ட நகர்வாக பெட்ரோலோடு எத்தனாலைக் கலக்கும் திட்டத்திலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. எத்தனாலும் பெட்ரோல் போல ஒரு எரிபொருள் தான். இதிலும் வாகனங்கள் நன்றாகவே இயங்கும். இதை கரும்புச்சக்கை மற்றும் தாவரங்கள் மூலமாக தயாரிக்க முடியும். ஆனால் இந்தியாவின் பெட்ரோல் தேவைக்கு நிகராக எத்தனாலை உற்பத்தி செய்ய முடியாது. எனவே பெட்ரோலில் இதைக் கலக்கும் முயற்சியை 2014 முதலே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்தில் வெறும் 1.5 சதவீதம் கலக்கப்பட்ட எத்தனால் தற்போது 10 சதவீதத்தையும் தாண்டி கலக்கப்படுகிறது. 

அடுத்த சில ஆண்டுகளில் இது 20% ஆக உயரும் என்றும், இது நடைமுறைக்கு வந்தால், ஆண்டுதோறும் 54 ஆயிரத்து 894 கோடி ரூபாய் இந்தியாவுக்கு சேமிப்பாகும் என மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறை 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஜியோ பிபி நிறுவனம். இதனால் பெட்ரோலின் விலை கணிசமாக குறையும் என்றும் தெரிவித்துள்ளார்கள். தற்போது தயாரிப்பு நிறுவனங்களும், E20 பெட்ரோலில் வாகனங்கள் நன்முறையில் இயங்கும் படியான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்களாம். 

எத்தனால் கலந்த பெட்ரோல் காற்று மாசுபாடையும் வெகுவாகக் குறைக்குமாம். இதனால் அரசும் எத்தனால் கலப்பை ஆதரிக்கிறது. 2025க்குள் இந்தியாவில் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இவ்வகை பெட்ரோல் மட்டுமே கிடைக்கும் படியான நிலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்தியாவில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த E20 வகை பெட்ரோல் விற்பனைக்கு வந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com