கிரண் ரிஜிஜூ
கிரண் ரிஜிஜூ

ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் செலவுகள் குறையும்: மத்திய சட்ட அமைச்சகம்!

மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் செலவுகள் குறையும், அரசு பணம் சேமிக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெற்றால் அதன் நிர்வாகச் செலவுகளும், சட்டம் – ஒழுங்கை காக்கவேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்றால் அரசு செலவினங்கள் குறைவதுடன், அரசியல் கட்சிகளும், அதன் வேட்பாளர்களும் பிரசாரத்திற்காக அதிகம் செலவிட வேண்டியிருக்காது என்றும் சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பா.ஜ.க. உறுப்பினர் ஹரிநாத்சிங் யாதவ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளிக்கையில், 1951,52, 1957, 1962 மற்றும் 1967-இல் மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் 1968 மற்றும் 1969-களில் சில மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதை அடுத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறை சீர்குலைந்தது.

இன்றைய சூழலில் தேர்தல்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதுடன் அதிகம் செலவு செய்யவேண்டியுள்ளது. எனவே செலவை குறைப்பதற்கு ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

நிலையான நிர்வாகம் வேண்டுமெனில் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக தேர்தல் சட்ட விதிகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரலாம் என சட்டக்கமிஷன் தனது 170-வது அறிக்கையில் கூறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து தேர்தல் நடத்தப்படுவதால் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடிவதில்லை எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதான் சிறந்தது என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல், இடைத்தேர்தல் என ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் காலதாமதமாகிறது.

 மத்திய சட்ட அமைச்சகம்
மத்திய சட்ட அமைச்சகம்

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருப்பதாகவும் எனினும் இது குறித்து மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்க்கட்சிகள், மக்கள் உரிமை கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மத்தியில் ஆளும் கட்சிக்கே சாதகமாக இருக்கும் என்று அவர்கள் கூறிவருகின்றனர்.

மத்திய மாநில அரசுகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பேசுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதை செயல்படுத்துவது கடினமாகும் என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்கிற யோசனை அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது. மத்தியில் ஆளுங்கட்சியின் பலம் ஓங்கியிருக்கும்போது இந்த கோஷம் எழுப்பப்படுகிறது.

மேலும் ஏதாவது ஒரு பிரச்னையை திசைத்திருப்ப வேண்டும் என்றாலும் இதைப் பற்றி பேசுகின்றனர். தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதை நடைமுறைப் படுத்துவது சாத்தியமல்ல என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com