எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... அதிகரிக்கும் டிமாண்ட், சரியும் விற்பனை! பேட்டரிதான் பெரிய வில்லன்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... அதிகரிக்கும் டிமாண்ட், சரியும் விற்பனை! பேட்டரிதான் பெரிய வில்லன்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், கடந்த சில ஆண்டுகளாக டூவீலர் வாங்க நினைப்பவர்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக குறைத்துக்கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகரவேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாகவும் இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்ந்து வருகிறது. ஆகவே, நடப்பாண்டிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையும் கணிசமான உயரும் என்று கடந்த ஆண்டு எதிர்பார்ப்பு இருந்தது. பத்து லட்சம் விற்பனை இலக்கு என்று நிதி ஆயோக் நிறுவனம் கூட எதிர்பார்த்திருந்தது. ஆனால், இதுவரை 62 சதவீத இலக்கை மட்டுமே எட்டியிருக்கிறோம்.

2023 நிதியாண்டில் இதுவரை ஆறு லட்சத்து இருபதாயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனையாகியிருக்கிறது. சென்ற ஆண்டோடு ஒப்பிடும்போது 146 சதவீதம் விற்பனை உயர்ந்திருக்கிறது. ஆனாலும், திட்டமிட்ட இலக்கான பத்து லட்சத்தை எட்டமுடியவில்லை. ஒருவேளை, எட்டவே முடியாத இலக்கை தவறாக கணித்து, அவசரப்பட்டுவிட்டார்களோ, என்னவோ?

அடிக்கடி நிகழும் தீ விபத்துகள்தான் விற்பனையை பாதித்திருக்கின்றன. பேட்டரி விஷயத்தில் மக்கள் மத்தியில் தயக்கமிருக்கிறது. பேட்டரி விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. பேட்டரி பழுதானால் அதை சரி செய்யவோ அல்லது வேறு பேட்டரி வாங்கவோ அதிக தொகை செலவழிக்க வேண்டியிருக்கும்.

சென்ற ஆண்டு பேட்டரி, தீ விபத்துகள் காரணமாக சில நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை திரும்பப் பெற்றன. ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் காலகட்டத்தில் வாகன விற்பனை திடீரென்று 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்தன. அதற்குப் பின்னர் சுதாரித்துக்கொண்டு எழ முடியவில்லை.

லித்தியம் பேட்டரிகளில் தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் தரப்படவேண்டும். ஓவர் சார்ஜ் செய்வதால் பேட்டரி எந்தவிதத்திலும் பழுது ஏற்பட்டுவிடக்கூடாது என்றெல்லாம் போக்குவரத்து அமைச்சகம் விதிமுறைகளை வைத்திருக்கிறது. பேட்டரிக்கு பாதுகாப்பு தர சான்றிதழ்கள் பெறப்படவேண்டும் என்கிற விதிகளெல்லாம் இனி அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

பேட்டரியின் ஆயுட்காலம், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் பேட்டரி சிறப்பாக செயல்படுமளவுக்கு இன்னும் மேம்பபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

ஓல்ஏ எலெக்ட்ரிக், ஓகிநாவா, ஹிரோ எலெக்ட்ரிக், ஆம்பியர், ஆதர் எனெர்ஜி என அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வகைகளும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அடுத்து வரும் நிதியாண்டில் 20 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com