
ஐந்தாண்டுகளுக்கு பின்னர் சட்டமன்ற நிகழ்வு, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் மறைமுகமாக இருந்த பனிப்போர் இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைப்பதுதான் சரியென்று சமீபத்தில் ஆளுநர் பேசியிருந்தார். வழக்கத்திற்கு மாறாக அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். வழக்கத்திற்கு மாறாக விளக்கம் அளிக்கும் வகையில் பேச்சின் முழு வடிவத்தையும் ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்தது.
ஆளுநர்களின் மோதல் போக்கை பொறுத்த வரையில், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் அப்படியொன்றும் மோசமில்லை என்கிற நிலைதான் நேற்று வரை இருந்து வந்தது. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.
2023 ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று தமிழில் பேச ஆரம்பித்தார். ஆனால், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள், 'தமிழ்நாடு எங்கள் நாடு" என்று கோஷமிட ஆரம்பித்தார்கள்.
ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றார்கள். தி.மு.க, அ.தி.முக உறுப்பினர்கள் அமைதியாக இருந்தார்கள். ஆளுநரோ எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய உரையை தமிழில் ஆரம்பித்தார்.
'நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது' என்று அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த ஆளுநர், வரப்போகும் திட்டங்களை பற்றியும் குறிப்பிட்டார்.
'பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பரந்தூரில் விமான நிலையம் அமைவது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். மதுரையில் 3-வது தகவல் தொழில்நுட்ப பூங்கா மதுரையில் ரூ 600 கோடியில் அமைக்கபட்டு வருகிறது. மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும்' என்று ஆளுநர் உரையை முடித்தார்.
ஆளுநர் உரையில் இரண்டு முறை "திராவிட மாடல்" எனக் கூறிப்பிடப்பட்டிருந்தது. திராவிட மாடல் என்னும் வார்த்தையை தவிர்த்துட்டதால் ஆளுங்கட்சியினர் அதிருப்தி அடைந்தார்கள். சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65வது பத்தியை வாசிக்காமல் தவிர்த்துவிட்டார்.
ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கைப் பிரகடனம்தான். சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் முன்னர் எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டியது மரபு. ஆனால், முழுமையாக படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. சில மாநிலங்களில் ஆளுநர்கள் சில வரிகளை படிப்பதை தவிர்த்ததும் உண்டு.
திராவிட மாடல் என்னும் வார்த்தையை ஆளுநர் படித்தே வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. சம்பந்தப்பட்ட வார்த்தைகளை மட்டுமே தவிர்த்திருக்கிறார். எழுதிக் கொடுத்த உரையை முழுமையாக தவிர்க்கவில்லை. தவிர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் உரையின் வரைவு வடிவம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டபோதே நிராகரித்திருக்கலாம். அப்படியெல்லாம் நிராகரிக்கவில்லை.
ஒரு சில வார்த்தைகளில் உடன்பாடு இல்லையென்றாலும் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தில் அவருக்கு உடன்பாடு இருந்த காரணத்தால்தான் சட்டமன்றத்தில் வந்து உரையை படித்திருக்கிறார்.
தி.மு.கவின் கூட்டணிக்கட்சிகள் எப்படியும் எதிர்த்தாக வேண்டும் என்று முடிவு செய்த காரணத்தால்தான் ஆளுநர் உரையை ஆரம்பிப்பதற்கு முன்னரே கோஷமிட்டு, சட்டமன்றத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்..
ஆளுநரை எதிர்க்கவில்லை. ஆனால், ஆளுநர் தன்னுடைய உரையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசின் சாதனைகளை எதிர்ப்பதாக அ.திமு.கவினர் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். ஆளுநர் உரையை முழுமையாக படிக்கவில்லை என்று முதல்வர் கண்டனம் தெரிவித்தார். அதற்குள் ஆளுநர் அவையை விட்டு வெளியேறிவிட்டார். ஆளுநரை அழைத்து அவமானப் படுத்திவிட்டார்கள் என்கிறது பா.ஜ.க
தமிழ்நாடு என்று உரையில் இடம்பெற்றிருந்தால் ஆளுநர் தமிழகம் என்று படிப்பார் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், ஆளுநர் தமிழ்நாடு என்று வரும்போது அதை தவிர்க்காமல் சரியாகவே படித்திருக்கிறார். ஆக, ஒருவரையொருவர் எதிர்க்க வேண்டும் என்று இரு தரப்பும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். இனி, எதிர்ப்பதற்கான காரணத்தைத்தான் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
ஆக, அடுத்த ரவுண்ட் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது!
ஆளுநர் உட்பட அத்தனை பேரும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் ஆனால் ஆளுக்கொரு காரணம் என்பது தான் ஆச்சரியம்.