Telegram செயலியில் நடக்கும் நூதன மோசடி.

Telegram செயலியில் நடக்கும் நூதன மோசடி.

குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைப்பை ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வந்த சமூக வலைதளங்கள் தற்போது வணிக நோக்கத்திற்காக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் Telegram போன்ற செயலிகள் சிறந்து விளங்குகிறது. இருப்பினும் இணையத்தில் பயன்படுத்தும் இதுபோன்ற செயலிகளில் நாம் கவனமாக இருப்பது நம் கடமையாகும். 

முன்பெல்லாம் கொள்ளையர்கள் நேரடியாகவே வீட்டுக்குள் புகுந்து திருடினார்கள். தற்போது எளிமையாக செல்போனைப் பயன்படுத்தி இணையம் வழியாகவே கொள்ளையடிக்கின்றனர். இந்நிலையில் சமீப காலமாக டெலிகிராம் செயலியில் நடந்து வரும் நூதர மோசடி குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "புதியதாக ஒரு மோசடி வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி டெலிகிராம் குரூப்பில் சேரச் செல்வார்கள். அந்த குரூப்பில் சேர்ந்து முதலீடு செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று சொல்வார்கள். நீங்களும் ஆசைப்பட்டு அந்த குரூப்பில் சேர்ந்து விட்டால், அங்கே ஏற்கனவே இருக்கும் நபர்கள் பலவகையில் உரையாடுவார்கள். 

நான் ஒரு காலத்தில் வருமானம் இல்லாமல் இருந்தேன், தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். அந்த நிலையில் தான் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் எனக்கு மாதம் 10,000 கிடைக்கும் என சொன்னார்கள். நானும் முதலீடு செய்த பிறகு, தற்போது மாதம் எனக்கு பத்தாயிரம் ரூபாய் வருகிறது. இதுவரை 5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்து, இரண்டே ஆண்டுகளில் 25 லட்சம் சம்பாதித்து விட்டேன் என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். நீங்களும் இதை நம்பி ஒரு லட்சமோ அல்லது இரண்டு லட்சமோ டெபாசிட் செய்தால், உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கி, அதில் டெபாசிட் செய்துவிட்டது போல் உங்களை நம்ப வைப்பார்கள். 

சில மாதங்கள் நீங்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு வட்டி தருவது போல் உங்களை நம்பவைத்து, மேலும் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறுவார்கள். இதை நம்பி நீங்களும் முதலீடு செய்வீர்கள். பின்பு உங்களுடைய அக்கவுண்ட் வாலட்டில் அதிகமாக பணம் சேரும்போது நீங்கள் திருப்பி கேட்டால், இன்னும் அதிகமாக முதலீடு செய்யுங்கள், 50 லட்சம் வரை அக்கவுண்டில் சேர்ந்தால் தான் பணத்தை தருவோம் எனச் சொல்வார்கள். நீங்களும் 50 லட்சம் கொண்டு வர மேலும் முதலீடு செய்வீர்கள். 

அவர்கள் குறிப்பிட்ட இலக்கையும் நீங்கள் கடந்த பிறகு பணத்தை திருப்பி கேட்டால், அங்கு தான் உங்களுக்குச் செக் வைப்பார்கள். உடனடியாக நீங்கள் இருந்த Telegram குரூப்பிலிருந்து நீக்கப்படுவீர்கள். அவ்வளவுதான் அதன் பின்னர் நீங்கள் எங்கு சென்றாலும் நீங்கள் முதலீடு செய்த பணம் உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது. இதுதான் புதிதாக நடந்து வரும் மோசடியாகும். இந்த டெலிகிராம் மோசடியில் யாரும் சிக்கி விடாதீர்கள்.

இதில் யாரும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தமிழக காவல்துறை சார்பில் முன்னதாகவே உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். எனவே அனைவரும் கவனமாக இருங்கள்" என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com