பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர், கோட்டயம் நசீர் நெஞ்சுவலி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நசீர், ஞாயிற்றுக்கிழமை (பிப் 26) காலை கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

மருத்துவமனை அறிக்கைகளின்படி, கோட்டயம் நசீர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) கண்காணிப்பில் இருப்பதாகவும், மேலும் அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

மலையாளத் திரைப்பட ரசிகர்கள் மட்டுமல்ல சின்னத்திரை ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு பிரபலமான முகம் தான் கோட்டயம் நசீருடையது. 1990 களில் நடுப்பகுதியில் ஒரு மேடை நாடகக் கலைஞராக மலையாள சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கிய நசீருக்கு ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களே வழங்கப்பட்டு வந்தன. ஆனாலும், தனக்கு கிடைத்த வேடங்களில் நசீர் முத்திரை பதித்தார். அது மட்டுமல்ல படத்தில் தான் வரும் காட்சிகள் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் அதில் தனித்த நடிப்பை வழங்கி தனக்கான ரசிகர்களை ஈர்த்துக் கொண்டார் நசீர். அது மட்டுமல்ல நசீர் மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவராகவும் முன்னணியில் இருந்து வருபவர்.

தன்னுடைய சின்னத்திரை வாழ்க்கையின் ஒரு பகுதியாக தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் இயங்கி இருக்கிறார் நசீர்.

பல திறமைகள் கொண்ட கோட்டயம் நசீர் ஓவியத்திலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். 2018 இல், அவர் ஒரு ஒவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்தார், அதில் அவர் தனது கலைப்படைப்புகளை காட்சிக்கு வைத்தார். கோட்டயம் நசீருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் நாட்டம் இருந்தது. அவருடைய படைப்புகள் எல்லாவிதமான நேர்மறைக் காரணங்களுக்காகவும் அந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் அத்தனை பேராலும் ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்டது என்றால் அது மிகையில்லை.

சமீபத்திய அவரது திரைப்படங்களைப் பொருத்தவரை, கோட்டயம் நசீரின் நடிப்பில் வெளியான ‘ரோர்சாச்’ திரைப்படத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் மம்முட்டி நாயகனாக நடித்திருந்தார். அதில் ஷஷாங்கன் எனும் கதாபாத்திரத்தில் நசீர் நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் தனது தீவிர நடிப்பால் நசீர் பார்வையாளர்களின் இதயங்களை வென்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com