கிணற்றில் விழுந்த சிறுத்தையை காப்பாற்றிய பெண் கால்நடை மருத்துவர்
கர்நாடக மாநிலம் மங்களூரை அடுத்த நிடோடி என்ற கிராமத்தில் உள்ள கிணற்றில் சிறுத்தை குட்டி ஒன்று தவறி விழுந்து விட்டது.
30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்து தவித்த சிறுத்தையை பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் காப்பாற்றினார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ளது கடீல் என்பவரது வீடு. அங்கு 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை குட்டி ஒன்று விழுந்துவிட்டது.
கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தந்ததை அடுத்து சிறுத்தையை மீட்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து வனவிலங்குகளை மீட்பதில் தேர்ச்சி பெற்ற கால்நடை மருத்துவர்களின் உதவியை நாடினர் வனத்துறையினர்.
அதற்காக சிட்டே பில்லி ஆராய்ச்சி மற்றும் மீட்பு மையத்தை தொடர்பு கொண்டனர். அங்கிருந்து மருத்துவர்கள் மேகனா, யாஷஸ்வி, ப்ரித்வி மற்றும் நபிஸா ஆகிய நான்கு பேர் கொண்ட மீட்புக் குழு வரவழைக்கப்பட்டது.
30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை கிணற்றைச் சுற்றி பொதுமக்கள் சூழ்ந்து நின்றதைப் பார்த்து அச்சமுற்று கிணற்றுக்குள் இருந்த குழி போன்ற மறைவிடத்தில் சென்று அமர்ந்துகொண்டது.
அதன் பின்வனத்துறையினர் சிறுத்தையை மீட்பது குறித்து கால்நடை மருத்துவக் குழுவுடன் ஆலோசனையில் இறங்கினர். அதன்படி கிணற்றில் இருந்து நீரை வெளியேற்ற முடிவெடுத்தனர்.
வனத்துறையினர் ஏணியை கிணற்றுக்குள் இறக்கி சிறுத்தையை மீட்க முயன்றனர். ஆனால் சிறுத்தை வெளியே வர விரும்பவில்லை.
சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது என்றும் அதற்காக இரும்பு கூண்டுக்குள் அமர்ந்து ஒருவரை கீழே இறக்கவும் முடிவு செய்யப்பட்டது.
எனவே கிணற்றுக்குள் இறங்கி சிறுத்தையை மீட்க முடிவு செய்தனர். டாக்டர் மேக்னா பாதுகாப்புக்காக ஒரு கூண்டுக்குள் அமர்ந்த நிலையில் கிணற்றுக்குள் இறக்கப்பட்டார். தற்காப்புக்காக அவர் கையில் ஒரு துப்பாக்கியும் வைத்திருந்தார்.
“கிணற்றுக்குள் இறங்கியபோது அதிர்ஷ்டவசமாக சிறுத்தை என் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தது. அது என்னைப் பார்த்து உறுமிக்கொண்டே இருந்தாலும், ஒரே நொடியில் அதற்கு ஊசி போட்டுவிட்டேன். அடுத்த 15 நிமிடத்தில் அது மயங்கிவிட்டது” என்று கூறுகிறார் டாக்டர் மேக்னா.
ஆனால், மயக்கம் அடைந்த சிறுத்தையைத் தனியாக தூக்கி கூண்டுக்குள் அடைக்க அவரால் முடியவில்லை. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கிணற்றுக்குள் இறங்கி சிறுத்தையை கூண்டில் அடைக்க உதவினார். அதன்பின்னர் சிறுத்தை பத்திரமாக கிணற்றில் இருந்து மேலே கொண்டுவரப்பட்டது.