உயரே உயரே பறக்குது... தங்கமே தங்கம்...!!!

உயரே உயரே பறக்குது...  தங்கமே தங்கம்...!!!

ரலாறு காணாத அளவுக்கு இன்றைய (௦5.௦5.2௦23 வெள்ளி) நிலையில் தங்கத்தின் விலையானது மிகக் கடுமையான உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்றைய விலை 22 கேரட் ஸ்டாண்டர்ட் தங்கம் பத்து கிராம் விலை ரூபாய் 58,000/-க்கு விற்பனை ஆகிறது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5,800/-ஆகும். 24 கேரட் பியூர் தங்கம் பத்து கிராம் விலை ரூபாய் 60,400/-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6,040/- ஆகும். சர்வதேச அளவில் இது மிகக் கடுமையான விலையேற்றம் எனச் சொல்லப் படுகிறது.

பொதுவாகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதுவும் சமீபத்திய கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஒரு பவுனுக்கு (எட்டு கிராம்) ஐந்தாயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

நூறு ஆண்களுக்கு முன்பாக தங்கத்தின் விலையினைக் கேட்டால், நம்மால் நம்பவே முடியாது. நம் தாத்தா பாட்டிகள் அந்தக் காலத்திலேயே தங்கத்தை வாங்கி குவித்து வைத்து, நமக்குத் தந்து விட்டு போயிருக்கக் கூடாதா என்கிற கோபம் நமக்கு வருகிறது. ஆம். அவ்வளவு குறைவு. அப்போது ஒரு கிராம் தங்கமே வெறும் இரண்டு ரூபாய்க்குள்தான் விற்பனை ஆகியுள்ளது.

1925ஆம் ஆண்டில்  பத்து கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18.75 பைசாவாக இருந்துள்ளது. 1935ல் ரூபாய் 30.81 பைசா. 1945ல் அதே பத்து கிராம் தங்கத்தின் விலை  ரூபாய் 62. அப்போது ஒரு கிராம் தங்கம் ஆறு ரூபாய் இருபது பைசா மட்டுமே. 1955ல் தங்கத்தின் விலை ரூபாய் 79.18 பைசா.  1965ல் தங்கத்தின் விலை ரூபாய் 71.75 பைசா.  1975ல் பத்து கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 54௦.  அந்தப் பத்து ஆண்டுகளில் தான் தங்கத்தின் விலையானது எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. 1985ல் தங்கத்தின் விலை ரூபாய் 2130 ஆகும். 1995ல் தங்கத்தின் விலை ரூபாய் 4680, அதன் பின்னர் 2005ல் பத்து கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 7000. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை எழுநூறு ரூபாய் மட்டுமே. 2015ல் தங்கத்தின் விலை ரூபாய் 26,345 ஆகும். அந்தப் பத்து ஆண்டுகள் இடைவெளிக்குள் சுமார் நான்கு மடங்குக்கு கொஞ்சம் குறைவாக விலை ஜம்மென்று உயர்ந்து விட்டது.  2021ல் அதே தங்கத்தின் விலை ரூபாய் 48,000.  இரண்டு ஆண்டுகள் இடைவெளியில், ரூபாய் பத்தாயிரம் உயர்ந்து இப்போது 2023ல் அதே பத்து கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 58,000 ஆக மிகவும் உச்சத்தைத் தொட்டுள்ளது தங்கத்தின் விலை.

சர்வதேச அளவிலான பன்னாட்டு வங்கிகள் தங்களின் வட்டி விகிதத்தைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான வரி விதிப்பும் அதிகரித்துள்ளது போன்றவைகள், தங்கத்தின் மீதான இந்த வரலாறு காணாத விலையேற்றத்துக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. விலை ஏற்றத்தில் இனி இறங்கு முகம் வருமா? வருவதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர். கடந்த நூறாண்டுகளில் மிக அபூர்வமாக அதுவும் கொஞ்சமாக விலை இறங்கி, பலப்பல ஆண்டுகளில் எவருமே எதிர்பாராத அளவுக்கு அவ்வப்போது விலையேற்றத்தில் உச்சத்தைத் தொட்டு எல்லோரையும் பிரமிக்க வைப்பதுதான் இந்தத் தங்கமே தங்கத்தின் தீராத கண்ணாமூச்சி விளையாட்டு. இன்னும் அடுத்த ஆண்டான 2024  இதே மே மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் ஏழாயிரத்தைத் தொட்டு விடக்கூடும் என்பதாகவும் சொல்லப்படுகிறது.

“உயரே உயரே பறக்கிறாயே தங்கமே தங்கம்” என்று ராகமாகப் பாடத் தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com