வெப்பநிலை அதிகரிப்பால் ஆந்திராவின் நல்லமலா வனப்பகுதியில் காட்டுத்தீ!
கர்னூல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தொட்டு வரும் நிலையில், இப்பகுதியை ஒட்டி இருக்கும் நல்லமலா வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ எனப்படும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
நந்தியால் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூர் மற்றும் நந்தியால் வனப் பிரிவில் தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, இப்பகுதியில் ஒவ்வொரு கோடை காலத்திலும் ஒரு நாளில் சராசரியாக 10 முதல் 15 வரையிலான தீவிபத்துகள் உருவாக மனித முயற்சிகளே காரணமாகின்றன. சில நேரங்களில் கவனமின்மை சில நேரங்களில் அலட்சியம் இப்படி ஏதோ ஒரு காரணத்தால் தனி நபர்கள் காட்டுத்தீ ஏற்பட காரணமாகி விடுகின்றனர். இத்தகைய விபத்துகள் இங்கு ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்படுகின்றன.
ஆத்மகூர் பிரிவு வன அலுவலர் (டிஎஃப்ஓ) செய்தியாளர்களிடம் பேசுகையில், "தற்போது, எல்லா தீ விபத்துகளும் மரங்கள் மற்றும் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தரையில் மட்டுமே பரவி மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக இங்கு இதுபோன்ற தீ விபத்துகள் பிப்ரவரி முதல் மே வரை ஒவ்வொரு பருவத்திலும் பதிவு செய்யப்படுகின்றன.
“இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த பீட் அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நல்லமலா வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தீவிர கண்காணிப்பு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன”.
- என்று அவர் தெரிவித்தார்.