"இந்தியாவின் பிரான்ஸ்" - புதுச்சேரியின் புராதன கட்டிடங்கள் : சுறுசுறுப்பாகும் சுற்றுலாத்துறை!

"இந்தியாவின் பிரான்ஸ்" - புதுச்சேரியின் புராதன கட்டிடங்கள் : சுறுசுறுப்பாகும் சுற்றுலாத்துறை!

புதுச்சேரியில் உள்ள 114 கட்டிடங்கள், புராதன சிறப்பு மிக்க கட்டிடங்களாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. பாண்டிச்சேரி என்றாலே அதன் பிரெஞ்சு தொடர்புகளும் நினைவுக்கு வருமளவுக்கு ஏராளமான புராதனக் கட்டிடங்கள் உண்டு.

புதுச்சேரி என்பதன் பிரெஞ்சு மொழிமாற்றம் செய்யப்பட்ட வார்த்தையாக பாண்டிச்சேரி இருக்கலாம். சோழர் காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்த அரிக்கமேடு, புதுச்சேரியின் முக்கியமான நகரமாக இருந்தது. ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் குறிப்பில் 'பொதுகே' என்று புதுச்சேரி குறிப்பிடப்படுகிறது.

பிரெஞ்சு, புதுச்சேரிக்கான தொடர்பு 17 ஆம் நூற்றாண்டு தொடர்ந்து இருந்து வருகிறது. 1693ல் டச்சு அரசு, புதுவையை கைப்பற்றியது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வருடம் 1699 ல் ஹாலந்து அரசிற்கும் பிரெஞ்ச் அரசிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி புதுச்சேரி பிரெஞ்சு வசம் வந்தது.

இருபுறமும் மரங்கள் நிறைந்த அகன்ற பாதை கொண்ட பிரெஞ்சு குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளை பாண்டிச்சேரியில் காணமுடியும். இவையெல்லாம் பிரெஞ்சு ஆதிக்கத்தை இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

பாண்டிச்சேரியில் செட்டிலாகிவிட்ட பிரெஞ்சு குடும்பங்கள், ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும். அதன் காரணமாகவே பிரெஞ்சு குடியிருப்புகள், கட்டிடங்கள், நினைவு சின்னங்கள், உணவகங்கள் என இந்தியாவின் பிரான்ஸ் என்றே அழைக்கப்படுகிறது.

புதுச்சேரிக்கு பிரான்ஸிலிருந்து அடிக்கடி வந்து செல்பவர்கள் அதிகம். இந்தியாவுக்கு வரும் ஐரோப்பியர்கள் தங்களது ஊரை ஞாபகப்படுத்துவதால் சில காலம் பாண்டிச்சேரியில் தங்கியிருந்துவிட்டு இந்தியாவின் பிற பகுதிகளுக்கு செல்வதுண்டு.

இந்நிலையில் பிரெஞ்சு காலத்து கட்டிடங்களை புராதன சின்னங்களாக மாநில அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. புதுச்சேரியின் பண்பாட்டை காக்கும் கமிட்டியின் ஆலோசனை படி, 114 கட்டிடங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 36 கட்டிடங்கள் அரசுக்கு சொந்தமானவை. 9 கட்டிடங்கள் பிரெஞ்சு அரசுக்கு சொந்தமானவை. 69 இடங்கள், ஆசிரமத்தைச் சேர்ந்தவை. இதில் 9 தேவாலயங்களும் இடம்பெறுகின்றன. 114 இடங்களையும் தர வரிசைப்படி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 10 கட்டிடங்கள் கிரேட் ஐ ஏ கட்டிடங்களாகவும், 87 கட்டிடங்கள் அடுத்த நிலை கிரேட் ஆகவும், 17 கட்டிடங்கள் மூன்றாவதாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய கட்டிடங்களை சுற்றுலாத் தளமாக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்படும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியை தமிழ்நாடு, பாண்டிச்சேரி அரசுகள் தொடர்ந்து முன்னெடுக்கின்றன. கொரானா பரவலுக்கு பின்னர் சுற்றுலாத் துறை சுணக்கத்தில் இருந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானால் பெரிய அளவில் வருவாய் கிடைக்கும் என்கிறார்கள். நல்லது நடந்தால் சரி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com