‘அன்பை வெளிப்படுத்த புத்தகங்களைக் கொடுங்கள்’ சித்தராமையா வேண்டுகோள்!
நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார் சித்தராமையா. அவரது பதவி ஏற்பு விழாவில் நாட்டின் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் அவருக்கு வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மேலும், அவரை நேரில் சந்திக்கும் அனைவரும் அவருக்கு பூங்கொத்துக்களையும் சால்வைகளையும் கொடுத்து தங்கள் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா ஒரு அன்பு வேண்டுகோளை விடுத்து இருக்கிறார். அதில், ‘பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் தனக்கு, அன்பின் வெளிப்பாடாக மலர்கள் அல்லது சால்வைகள் கொடுப்பதை விட, நல்ல புத்தகங்களைக் கொடுப்பதையே விரும்புவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனிப்பட்ட அல்லது பொது நிகழ்வுகளின்போது எனக்கு மரியாதை செலுத்த விரும்புபவர்கள், பூக்கள் அல்லது சால்வைகளைக் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளேன்” என்று பதிவு செய்து உள்ளார்.