குஜராத்: நீல காளைகளுக்கு விஷம் வைத்த 3 விவசாயிகள் கைது!

குஜராத்: நீல காளைகளுக்கு விஷம் வைத்த 3 விவசாயிகள் கைது!

அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த கிர் (கிழக்கு) வனவிலங்கு பிரிவில் உள்ள காமி கிராமத்தின் வருவாய் பகுதியில் ஒன்பது நீல காளைகளின் (நீல்காய்ஸ்) சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து ஒரு நாளுக்குப் பிறகு, தாவர உண்ணி விலங்கு வகைகளைச் சார்ந்த இந்த நீலகாளைகளுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறி மூன்று விவசாயிகளை வனத்துறை புதன்கிழமை கைது செய்தது.

இதற்கிடையில், புதன்கிழமை மேலும் ஒரு நீல காளையின் சடலம் மீட்கப்பட்டதால் இச்சம்பவத்தில் இறந்த காளைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

கிர் (கிழக்கு) வனவிலங்குப் பிரிவின் சரசியா ரேஞ்ச் அதிகாரிகள் காமி கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் ஹிராபரா, ஹஸ்முக் ஹிராபரா மற்றும் ஜெயேஷ் மங்ரோலியா உள்ளிட்ட 3 விவசாயிகளை புதன்கிழமை கைது செய்தனர்.

"குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலிமர் டிரம்களில் இருந்து தண்ணீர் தொட்டிகளைத் தயாரித்து, அதில் தண்ணீரை நிரப்பி, அதில் சில விஷங்களைச் சேர்த்து செயற்கை நீர்நிலைகளை உருவாக்கியுள்ளனர். ஒரு இடத்தில், நிலத்தடி பைப்லைனில் இருந்து கசிந்த தண்ணீரால் உருவான குட்டைகளில் யூரியாவை கலக்கினர். நீல காளைகள் இந்தத் தொட்டிகளில் இருந்து தண்ணீரைக் குடித்து இறந்துவிட்டன, ”என்று கிர் (கிழக்கு) வனவிலங்குப் பிரிவின் துணை வனப் பாதுகாவலர் (DCF) ராஜ்தீப்சிங் ஜாலா கூறினார்.

சில விவசாயிகள் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் ரசாயன உரமான யூரியாவை தண்ணீரில் கலப்பதாகவும், அந்த நீர் விலங்குகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும் DCF தெரிவித்துள்ளது.

“இறந்து போன இந்த நீல காளைகளுக்கும் விவசாயிகள் யூரியாவைப் பயன்படுத்தி விஷம் கொடுத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இருப்பினும், விஷத்தை அடையாளம் காண தடயவியல் பகுப்பாய்வுக்காக தண்ணீரின் மாதிரிகளை அனுப்பியுள்ளோம், ”என்று ஜாலா கூறினார்.

இதுவரை இறந்த 10 விலங்குகளில் ஐந்து ஆண், மூன்று பெண் மற்றும் இரண்டு அடையாளம் தெரியாத விலங்குகளும் உள்ளன. சில நூறு மீட்டர் சுற்றளவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்."செவ்வாய்க்கிழமை வெளிச்சத்திற்கு வந்த சடலங்கள், முதல் பார்வையிலேயே குறைந்தது இரண்டு நாட்கள் பழமையானவை" என அடையாளம் காணப்பட்டதாக DCF கூறியது.

குற்றத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு டிராக்டர் மற்றும் மூன்று மோட்டார் பைக்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும்,

பாலிமர் டிரம்களால் தயாரிக்கப்பட்ட நான்கு தண்ணீர் தொட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சரசியா ரேஞ்ச் வன அலுவலகத்தில் நீல காளைகளை வேட்டையாடிய குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிசிஎஃப் தெரிவித்துள்ளது. “நீல காளைகளை வேட்டையாடுவது கூட்டுக் குற்றமாகும். எவ்வாறாயினும், இந்த விஷயத்தில், விவசாயிகளின் வெளிப்படையான நோக்கம் இந்த தாவர உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளிடமிருந்தூ தங்கள் பயிர்களைப் பாதுகாப்பது அல்ல, எப்படியெனில் காளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இந்த விவசாயிகளின் வயலில் எந்த பயிர்களும் இல்லை என்பதற்கு நாங்களே சாட்சி. அப்படியெனில் இவர்களின் நோக்கம் இந்த காளை இனங்களை அழிப்பதே அன்றி வேறு ஒன்றும் இல்லை. இதுதான் காரணம். என்றனர் வனத்துறை அதிகாரிகள்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக DCF கூறியது.

தற்போது தாரி நீதிமன்றம் மூன்று விவசாயிகளையும் ஜாமீனில் விடுவித்தது.

கிர் நிலப்பரப்பில் உள்ள வருவாய்ப் பகுதிகளில் சிங்கங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஜுனாகத்தைச் சேர்ந்த கதிரியக்க நிபுணர் டாக்டர் ஜல்பன் ருபாபரா, விஷம் கலந்த நீல காளைகளின் சடலங்கள் சிங்கங்களுக்கு கூட அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறினார். "யூரியா கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விலங்குகளின் இரத்தத்தில் அம்மோனியா அளவு அதிகரிக்கிறது மேலும் இது கல்லீரல் போன்ற உறுப்புகளை சேதப்படுத்துகிறது, இது மரணத்திற்கு வழிவகுக்கிறது. சிங்கங்கள் பெரும்பாலும் தாவரஉண்ணிகளின் அனைத்து உறுப்புகளையும் உண்கின்றன, அத்தகைய உறுப்புகளில் யூரியா விஷம் இருந்தால், சிங்கங்களும் விஷத்தின் விளைவுகளை உணரக்கூடும்" என்று டாக்டர் ரூபாபரா கூறினார்.

ஆக, விவசாயிகள் வைத்த விஷமானது காளைகளை மட்டுமல்ல தற்போது அவற்றை உண்ணும் சிங்கங்களின் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகி இருப்பது கண்கூடு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com