நுபுர் சர்மாவுக்கு துப்பாக்கி லைசென்ஸ்!

நுபுர் சர்மாவுக்கு துப்பாக்கி லைசென்ஸ்!

பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பினார். இவரது பேச்சுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது.

இதைத் தொடர்ந்து சர்மா, நிபந்தனையின்றி சர்ச்சைகுரிய கருத்துகளை வாபஸ் பெற்றார். மேலும் டுவிட்டர் மூலம் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது தமது நோக்கமல்ல என்று தெரிவித்தார்.

இதனிடையே மத உணர்வுகளை புண்படுத்தியதாக நுபுர் சர்மாவுக்கு எதிராக பல எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன. நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. வளைகுடா நாடுகள் இந்திய தூதர்களை நேரில் அழைத்து கண்டனங்கள் தெரிவித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தன. பா.ஜ.க.வும் அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது.

உச்சநீதிமன்றமும் நுபுரின் நாவடக்கம் இல்லாத பேச்சு நாட்டை சிக்கலில் ஆழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டது. அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறியது.

நுபுர் சர்மாவுக்கு எதிரான வழக்குகளை ஒன்றிணைத்த உச்சநீதிமன்றம் அவர் கைது செய்யப்படுவதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்கியது.

இஸ்லாம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து தமக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக புகார் அளித்ததை அடுத்து சர்மாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தில்லி காவல்துறை பாதுகாப்பு அளித்தது.

சர்மாவின் கருத்துகளை ஆதரித்ததற்காக உதய்பூரில் ஒரு தையல்காரர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் அமராவதியில் ஒரு வேதியியலாளரின் கழுத்து அறுக்கப்பட்டது.

இந்த நிலையில் தாம் கூறிய சர்ச்சைக்கிடமான கருத்துக்களால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் நுபுர் சர்மா தில்லி போலீஸாருக்கு விண்ணப்பித்திருந்தார். அதை ஏற்ற தில்லி போலீஸார் அவர், துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com