வீட்டுவேலைக்கு வந்த 17 வயது சிறுமியைச் சூடு வைத்து ப்ளேடால் கீறி துன்புறுத்தல்: தம்பதி கைது, வேலை பறிப்பு

வீட்டுவேலைக்கு வந்த 17 வயது சிறுமியைச் சூடு வைத்து ப்ளேடால் கீறி துன்புறுத்தல்: தம்பதி கைது, வேலை பறிப்பு

வீட்டுவேலைக்கு வந்த 17 வயது சிறுமியை துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட தம்பதிகளுக்கு வேலை பறிபோனது.

குர்கானைச் சேர்ந்தவர் மணிஷ் கட்டார். இவரது மனைவி கமல்ஜித் கெளர். மணிஷ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி குர்கானில் உள்ள மக்கள் தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

5 மாதங்களுக்கு முன்பாக வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து ஒரு சிறுமியை, வீட்டு வேலைக்காக அழைத்து வந்து பணியில் அமர்த்தியுள்ளனர். வீட்டுவேலை செய்யவும், குழந்தைய பார்த்துக் கொள்ளவும் மாதம் ரூ.10,000 சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால், அந்த பெண்ணுக்கு சரியாக உணவு கொடுக்காமலும், இரவில் தூங்கவிடாமலும் அந்த தம்பதிகள் வேலை வாங்கியுள்ளனர். வேலையை சரியாகச் செய்யவில்லை எனக்கூறி உடலில் சூடு வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வெளியிலோ அல்லது தனது பெற்றொர்களிடமோ தொடர்பு கொள்ள முடியாமல் அந்த சிறுமியை வீட்டுக்குள்ளேயே சிறை வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளியில் தெரியவரவே சகி என்னும் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பிங்கி மாலிக் இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அந்த சிறுமையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக அந்த சிறுமி அதிகாரிகளிடம் கூறியதாவது, “என்னை கயிறு, குச்சிகளால் அடித்தனர். என் கையிலும் உதடுகளுக்கு அருகிலும் பிளேடால் கீறினர் சூடான இரும்பு இடுக்கியால் சூடுவைத்தனர். தீப்பெட்டிகளைப் பயன்படுத்தியும் சூடுவைத்தனர். என்னை தரையில் படுக்கவைத்தனர். நான் கொண்டு வந்த துணிகளை கிழித்து போட்டனர். ஒரு சந்தர்ப்பத்தில், அவர்கள் என்னை கழுத்தை நெரித்து கொல்லவும் முயன்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகார்களை அடுத்து மணீஷ் கட்டாரும், அவரது மனைவி கம்லஜித் கெளரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதுசிறுமையை கொடுமைபடுத்தியது, பாலியல் ரீதியில் துன்புறுத்தியது மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அந்த கமல்ஜித் கெளர் வேலை செய்து வந்த பொதுமக்கள் தொடர்பு நிறுவனம் அவரை வேலையிலிருந்து பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. நாங்கள் இந்திய சட்டத்தை மதிக்கிறோம். மனிதாபிமான மற்ற செயலை நாங்கள் கண்டிக்கிறோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மணீஷ் வேலைசெய்து வந்த காப்பீட்டு நிறுவனமும் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. எந்த ஒருவரானாலும் நடத்தை முக்கியமானது. சிறுமியை துன்புறுத்தி மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட அவர் இனியும் பணியில் இருப்பதில் அர்த்தமில்லை. அவரை பணிநீக்கம் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

சிறுமியிடம் மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்து கொண்ட தம்பதிகளுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்கு உதவுமாறு ஹரியாணா முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com