ஹரியாணாவில் வகுப்பு மோதல் 3 பேர் பலி:போலீஸ் தடையுத்தரவு!

ஹரியாணா வன்முறை
ஹரியாணா வன்முறை

ரியாணா மாநிலத்தில் திங்கள்கிழமை இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். தவிர 20 பேர் காயமடைந்தனர். குருகிராமத்தை ஒட்டிய நுஹ் என்ற இட்த்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய பிரிஜ் மண்டல ஜலாபிஷேக யாத்திரையின் போது இந்தச் சம்பவம் நடந்தது.

மத ஊர்வலத்தை ஒரு கும்பலினர் தடுக்க முயன்றபோது நடந்த கல்வீச்சில் ஊர்க்காவல் படையினர் பலத்த காயங்களுடன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். வன்முறைக் கும்பலினர் கார்களுக்கும் தீவைத்ததாக போலீஸார் கூறினர். மேலும் நள்ளிரவு நடந்த வன்முறையின் போது ஒருவர் கொல்லப்பட்டதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஊர்வலம் குருகிராமம்- ஆல்வார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நுஹ் என்ற இடத்தை அடைந்தபோது மற்றொரு பிரிவைச் சேர்ந்த கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தியது. மேலும் ஊர்லவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது.

அப்போது திடீரென வன்முறை ஏற்பபட்டது. இதையடுத்து தனியார் மற்றும் அரசு வாகனங்களுக்கு ஒரு கும்பலினர் தீவைத்தனர். இந்த கொலைவெறி தாக்குதலை அடுத்து ஊர்லவத்தில் பங்கேற்ற 2,500 பேர் அருகில் உள்ள கோவிலில் தஞ்சம் அடைந்தனர். அந்த இடத்தை வன்முறைக் கும்பலினர் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. கோயிலுக்கு வெளியே வன்முறை வெடித்ததால் அவர்களால் வெளியில் செல்ல முடியவில்லை. இதையடுத்து போலீஸார் வந்து அவர்களை மீட்டனர்.

மாலையில் வன்முறைக் கலவரம் குருகிராம்-சோஹ்னா தேசிய நெடுஞ்சாலையிலும் பரவியது. கார்களுக்கு தீவைக்கப்பட்டது. வன்முறைக் கும்பலினர் போலீஸார் மீது கல்வீசினர்.

வன்முறை மேலும் சில இடங்களில் பரவியதை அடுத்து போலீஸார் நுஹ், குருகிராமம், பல்வல் மற்றும் பரீதாபாத் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பித்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நுஹ் பகுதியில் மூன்று நாட்களுக்கு இணையதள சேவை முடக்கிவைக்கப்பட்டுள்ளது.

பஜ்ரங்தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆட்சேபகரமான விடியோவை வெளியிட்டதை அடுத்து மோதல் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடியோவை பஜ்ரங்தள உறுப்பினர் மோனு மனேஸார் மற்றும அவரது கூட்டாளிகள் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com