புதுவையில் உயர்நீதிமன்றம் கிளை -  அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

புதுவையில் உயர்நீதிமன்றம் கிளை - அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

விரைவில் புதுச்சேரியில் உயர்நீதிமன்றம் கிளை அமைக்கப்படும் என்று கூறிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, அதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதை திறந்து வைக்கவும் அனைவரும் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்களுக்காக  ரூ.13.79 கோடியில் 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை முன்னிலையில் நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில தலைமை நீதிபதி செல்வநாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்றனர்.

புதுச்சேரி யூனியின் பிரதேசத்தில் விரைவில் உயர்நீதிமன்றம் கிளை அமைக்கப்படும் என கூறிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, அதற்காக மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,  புதுவையில் சிறிய பள்ளிக்கூடத்தில் சட்டக்கல்லூரி இயங்கி வந்தது. அதில் படித்தவர்கள் இன்று சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனர். தற்போது சட்டக்கல்லூரி பெரிய வளாகத்தில் காலாப்பட்டில் இயங்கி வருகிறது. சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றவர், ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்ட நிலத்தை தேர்வு செய்தபோது, மரங்கள் அடர்ந்து காடுகள் இருந்த பகுதியை தேர்வு செய்தோம். இங்கு விரைந்து பணிகளை முடித்து கோர்ட்டு வளாகத்தை உருவாக்கினோம். இன்று பிற மாநிலத்தினர் வியக்கும் வகையில் கோர்ட்டு வளாகம் அமைந்துள்ளது. புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம். நிர்வாகம், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். புதுவை மாநில தகுதி பெற தேவையான ஆலோசனைகளை நீதிபதிகள் வழங்க வேண்டும் என்றார்.

மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ பேசும்போது புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்கப்படும். இங்கு வழக்கறிஞர்கள்  அறைகள் கட்ட ஏற்கனவே ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது உயர்நீதிமன்ற கிளை அமைக்க  மத்தியஅரசு தேவையான நிதி ஒதுக்கியுள்ளது என்றும் கூறியவர்,  விரைவில் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதை திறந்து வைக்கவும் அனைவரும் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வக்கீல்கள், நீதிபதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ராமன், சென்னை உயர்நீதிமனற் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, புதுவை மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., நேரு எம்.எல்.ஏ., தலைமை செயலர் ராஜீவ்வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் நன்றி கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com